மக்கள் அவலத்தில் வாழுகையில் மிருகக்காட்சிச் சாலையா?


IMG-7c096ac3e742d9bce7089f06a6960bad-V
வடமாகாணத்தில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் சுமார் 62000 ஏக்கர்கள் நிலத்தில் குடியிருந்து வருவதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற இன்னோரன்ன துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் புறக்கணிப்பினையும் தாண்டி மலேஷிய பிரதம மந்திரியுடனான வடமாகாண முதலமைச்சரின் சந்திப்பு சுமுகமாக இன்று கொழும்பில் நடைபெற்றது. சுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது. பிரமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, தனிப்பட்ட அவரின் வைத்தியர் வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழாமும் முதலமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரசன்னமாய் இருந்தனர்.
சந்திப்பின் போது சுமார் ஐயாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இது வரையில் விடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். போரினால் பாதிக்கப்பட்ட 49000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் சுமார் 11000 முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் படையினரின் அண்மை பல பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளதென்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சுழலும் நிதியத்தை ஏற்படுத்தினால் நல்லது என்று முதல்வர் கூறினார்.இருதரப்பாரும் வட இலங்கை மக்களுக்கும் மலேஷியா நாட்டுக்கும் இடையில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள உறவை வலியுறுத்தினர். அன்று இங்கிருந்து சென்ற தமிழர்கள் நவீன மலேஷியாவை உருவாக்க முன்னின்றிருந்தார்கள் எனில் இன்று அங்கிருந்து அதே புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் எம் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் 600 ஏக்கர் காணியில் திறந்த மிருகக்காட்சி பூங்காவை அமைக்க மத்தியின் அமைச்சர் ஒருவர் நடவடிக்கை எடுத்ததை எடுத்துரைத்த போது மலேசிய பிரதமர் ஐம்பதாயிரம் வரையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 11000 வரையில் முன்னாள் போராளிகளும் ஊனமுற்றவர்களும் பல வித தேவையுடன் இருக்கும் போது மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விரும்புவது விசித்திரமாக இருக்கின்றது என்றார்.
IMG-bf68861dc0890482414d3bd60031e6c3-V
தொடர்ந்து எவ்வாறான முதலீடுகள் நன்மை பயக்கும் என்று பிரதமர் கேட்டதற்கு விவசாயம், மீன்பிடி, கல்வி, விளையாட்டு, சுகாதாரம், மகளிர் விவகாரங்கள், சுற்றுலா, வீடமைப்பு போன்ற பலவற்றிலும் செய்யக் கூடிய முதலீடுகள் பற்றி எடுத்துக் கூறினார்.
வீடமைப்புப் பற்றி குறிப்பிடுகையில் வட மாகாணத்தில் 139000 வீடுகள் தேவையாயிருந்ததென்றும் 50000 வீடுகளை ஏற்கனவே இந்தியா தந்துதவியுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதென்றும் அரசாங்கத்தாலும் கட்டப்பட்டு வருகின்றது என்றும் எப்படியும் 50000க்கு மேல் தேவையிருப்பதை முதல்வர சுட்டிக் காட்டினார்.
ஒரு தகவல் சேகரிக்கும் குழுவை மலேஷியாவில் இருந்து வடமாகாணத்திற்கு உங்கள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அனுப்புவதாகவும் எந்தெந்தத் துறையில் உதவிகள் புரிய முடியும், முதலீடுகள் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஆராய்ந்து தமக்குச் சொன்ன பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். குழுவில் எமது புலம்பெயர் தமிழ் மக்களின் மூன்றாந் தலைமுறை மக்களும் அடங்குவார்கள் என்றும் கூறினார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila