தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திப்பின் பின்னர் கருத்துவெளியிட்ட சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதனுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் தொடர்ந்தும் சந்திப்புக்கள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
இதனிடையே செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொண்ட இரா.சம்பந்தன் சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் வாக்காளர் பங்கீடு தொடர்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஏராளமான ரெலோ உறுப்பினர்கள் வந்திருந்ததாகவும் திடீரென கூடுதல் எண்ணிக்கையில் கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் எழுந்து சென்றதாகவும் தமிழரசுக்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் செல்வம் அடைக்கலநாதனை சந்தித்த சுமந்திரன், முன்னைய வழங்கு நிலுவைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியே திரும்பவும் சமரசத்துக்கு உடன்பட வைத்திருக்கலாம் என்று கட்சியின் பெயர் குறிப்பிடவிரும்பாத ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு முனைந்தால் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது போல செயற்பட்டு சமரசத்துக்கு முற்படுபவர்கள் மூலம் தமது வேட்பாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ரெலோ ஆலோசித்துவருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.