ஓட்டு மொத்த ஈழத்தமிழ் மக்களது எதிர்ப்பினையும் தாண்டி முற்றவெளியில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடல் இன்றிரவு தகனக்கிரியை செய்யப்பட்டுள்ளது. இதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு தோல்வியடைந்துள்ளதுடன் நீதிமன்றம் தடையுத்தரவு பிறக்க மறுப்பும் தெரிவித்திருந்த நிலையில் பூதவுடல் படையினர் மத்தியில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரியகுள நாக விகாரையில் இருந்து நகரின் ஊடாக மறைந்த பிக்குவின் உடல் முற்றவெளிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பிலிருந்து விமானப்படை விமான மூலம் எடுத்துவரப்பட்ட சடலம் முதலில் நாகவிகாரைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ்.நகரினூடாக முற்றவெளிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதற்காக நகரின் போக்குவரத்து ஏற்பாடுகள் மாற்றப்பட்டன. பெருமளவிலான தென்பகுதி மக்கள் பஸ்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டிருந்தனர்.பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான புத்த பிக்குகளும் தருவிக்கப்பட்டிருந்தனர்.
முற்றவெளி காவிக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.விசேட பந்தல்கள் சடலத்தை அடக்கம் செய்ய விசேட சிதைகளென படையினரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இதேவேளை ஆயிரக்கணக்கில் படையினர் வெள்ளை உடைகள் அணிந்த நிலையினில் முற்றவெளியில் வாகனங்கள் மூலம் தருவிக்கப்பட்டிருந்தனர்.இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலரும் வருகை தந்து அஞ்சலித்திருந்தனர்.
தமிழ் மக்கள் ஒட்டுமொத்த இயலாமை,தமிழ் அரசியல் தலைமைகளது பொறுப்பின்மை என்பவற்றிற்கு மத்தியில் அனைவரும் வெறுமனே வேடிக்கை பார்க்க சடலம் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.