இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அரச தரப்பின் குற்றச் செயல்களை மூடி மறைத்து வெள்ளையடிக்கும் என்றே பலர் கருதியிருந்தார்கள்.
எனினும், அதிர்ச்சியளிக்கும் வகையில் அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பிலும் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் தொடர்பிலும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரணகம அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதமே பூர்த்தியாகியுள்ளது.
செனல்4 ஊடகத்தின் நோ பயர் ஸோன் ஆவணப்படும் உண்மையானது எனவும் ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுக்கள் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இராணுவ விசாரணைகள் நம்பகமானதாக அமையாது எனவும் சர்வதேச ரீதியிலான கண்காணிப்புடன் கூடிய நிதிமன்ற விசாரணைகளின் ஊடாகவே உண்மையை வெளிக்கொணர முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை 178 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு அப்பால் சென்று, பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
யுத்தக் குற்றச்செயல் குறித்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு இருக்கலாம் என்றே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடாபில் தனியான ஓர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் சாசனத்திற்கு அமைவாக விசாரணைகளை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: புவுN