யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியினால் ஆனோல்ட் போட்டியிடுவதையடுத்து, அரங்கில் புதிய திருப்பமாக பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க மற்ற கட்சிகள் முயற்சித்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலை கூட்டணி, மற்றும் சில தனிப்பட்ட வர்த்தகர்களின் பின்னணியில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகையாளர் வித்தியாதரன் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக களமிறங்க முயற்சித்த நிலையில் அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
இதையடுத்து, யாழ்ப்பாண வர்த்தகர் ஒருவரின் பின்னணியில் பொதுவேட்பாளர் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாதரனை பொதுவேட்பாளராக்க வர்த்தகர் முயற்சித்தார். எனினும், தமிழ் காங்கிரஸ் இதற்கு சம்மதிக்கவில்லை. சட்டத்தரணி மணிவண்ணனை பொதுவேட்பாளராக்கினால் மட்டுமே பொதுவேட்பாளரிற்கு சம்மதிப்போம் என்றுள்ளார்கள். உதயசூரியன் கூட்டிடம் பொருத்தமான முதல்வர் வேட்பாளர் இல்லாதபடியால் பொதுவேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.
இது தொடர்பான பேச்சுக்கள் நடந்து வருகின்றன. மற்ற இடங்களில் பிரிந்து போட்டியிட்டாலும், மாநகரசபையில் பொதுவேட்பாளரை ஆதரிக்க தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலை கூட்டணி என்பன கொள்கையளவில் இணங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.