முரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்புக்கு மிடையில் வலுத்துக்கொண்டிருக் கின்றநிலையில் அவற்றை சம நிலைப்படுத்தி தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கு இரண்டு கட் சிகளையும் வழிநடத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதம ருக்கும் காணப்படுகின்றது. தமது எதிர்காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலைவர்களும் செயற் படவேண்டும். நீண்டகால பிரச்சி னைகளைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் சுயநல அரசியலில் ஈடுபட்டுவிடக் கூடாது. மக்கள் தமக்கு எதற்காக அமோக ஆதரவை கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு இரண்டு தலைவர்களும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
பரபரப்பான அரசியல் சூழலில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசாங்கம் ஆட்டம்காண தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவதற்கு ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சியில் இருக்கின்ற சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் 12 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரப்போகின்றனர் என்ற செய்தியே தற்போது இந்த தேசிய அரசாங்கத்தை ஆட்டம்காண செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டு மின்றி ஐக்கிய தேசியக்கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் உள்ள முரண்பாடுகள் வலுப்பெற்றுவரும் நிலையில் மக்களுக்கு தமது எதிர்பார்ப்புக்களை இழக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக இரண்டு பிரதான கட்சிகளுமே அடுத்த 2020 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் தனித்து ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்பட்டு வருகின்றன. எந்தவொரு காரணத்திற்காகவும் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எண்ணவில்லையென இரண்டு பிரதான கட்சிகளினதும் முக்கியஸ்தர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
எனவே இந்த விடயங்கள் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதாக அமைந்திருக்கின்றன. இந்த நிலையிலேயே திடீரென சுதந்திரக்கட்சியின் சார்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற 12 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பல சிரேஷ்ட மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்த்திருக்கின்ற நிலையில் இந்த 12 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரியவருகிறது. அதுமட்டுமின்றி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மேலும் சிலர் சுயாதீனமாக செயற்பட முன்வரலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தற்போது சுயாதீனமாக செயற்படப்போவதாக கூறப்படும் 12 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்து கொள்வதாக எந்தவொரு கட்டத்திலும் அறிவிக்கவில்லை. ஆனால் இவ்வாறு சுயாதீனமாக செயற்படவுள்ளதாகக் கூறுபவர்களுடன் மஹிந்த ராஜபக் ஷ பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவர்கள் எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. ஆனால் 12எம்.பி.க்கள் சுயாதீனமாக செயற்படப்போவது தொடர்பிலேலே தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவர்கள் ஏன் இவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதற்கு முயற்சிக்கின்றனர் என்பது தொடர்பில் பெரும்பான்மை இன மூத்த ஊடகவியலாளர் ஒருவர் இவ்வாறு கருத்து பகிர்ந்தார்.
அதாவது நீங்கள் ஒரு விடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக்கட்சிக்குள் போராடி ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வெற்றிபெற்றிருந்தால் சுதந்திரக்கட்சியின் அனைவரும் அவருடனேயே இருந்திருப்பார்கள். மஹிந்தவின் பின்னால் எந்தவொரு உறுப்பினர்களும் போயிருக்க மாட்டார்கள். இந்த விடயத்தை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது மஹிந்த செயற்பட்ட விதத்தை குறிப்பிட்டு கூறவேண்டியுள்ளது. அதாவது மஹிந்தராஜபக் ஷ கட்சிக்குள்ளேயே போராடி ஜனாதிபதி பதவியைப் பெற்றார். அதன்பின்னர் அனைத்து சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் சந்திரிகாவை விட்டுவிட்டு மஹிந்தவுடன் கைகோர்க்க ஆரம்பித்து விட்டனர். அந்தநிலையை தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டவில்லை. அவர் உள்ளகரீதியில் போராடினால் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தினால் வெளியேறி எதிர்க்கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாகினார். அந்தநேரம் காணப்பட்ட அரசியல் சூழல் அவருக்கு அந்த முடிவை எடுப்பதற்கு காரணமாகியது. அவ்வப்போது அரசியல் சூழலில் சரியான முடிவை எடுப்பதே அரசியல்வாதியின் சாமர்த்தியமாகும்.
அந்த வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த அரசியல் சூழலில் முடிவெடுத்தார். ஆனால் அவர் அவ்வாறு எடுத்த முடிவை சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனரா என்பதே இன்று கேள்வியாகும். அவ்வாறு மைத்திரிபால சிறிசேன கட்சியை விட்டு வெளியேறி இன்னொரு கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியதை சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனரா. என்பதே இங்கு எழும் பிரதான கேள்வியாக காணப்படுகின்றது.
அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்டதை அதிகளவான சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகின்றது. அதனால்தான் தற்போதுகூட 52 உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் இருக்கின்றனர். மைத்திரிபால சிறிசேன அனைத்து இனங்களையும் இணைத்துக்கொண்டு சுதந்திரக்கட்சியை வலுப்படுத்துவதற்கு கடும் அர்ப்பணிப்பை மேற்கொள்கின்றார். ஆனால் அதனை முழுமையாக சுதந்திரக்கட்சியின் எம்.பி.க்கள் எத்தனை பேர் ஏற்றுக்கொள்கின்றார்களா என்பதே இங்கு கேள்வியாகும். இவ்வாறு அந்த மூத்த ஊடகவியலாளர் சுதந்திரக்கட்சியின் தற்போதையநிலைமையை விளக்கினார்.
எது எப்படியிருப்பினும் அரசியலில் எப்போது எதுவும் நடக்கலாம் என்பதே இங்கு முக்கியமான விடயமாகும். குறிப்பாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பல்வேறு காரணங்களை கூறின. அதாவது புதிய அரசியலமைப்பை உருவாக்கவும், சர்வதேசத்தை வெற்றிகொள்ளவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும் அரசியல் தீர்வைக் காணவும் தேர்தல் முறையை மாற்றவும் தேசிய அரசாங்கம் அமைப்பதாக கூறப்பட்டது. இவற்றில் தற்காலிகமாக தற்போது சர்வதேசம் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதே தவிர ஏனைய எந்தவொரு விடயமும் வெற்றிகொள்ளப்படவில்லை. இவ்வாறான நிலையில் தற்போது தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே மக்களால் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்றம் செல்கின்றது. ஆனால் பாராளுமன்றம் சென்றபின்னர் மக்களின் தேவைகள் மறக்கடிக்கப்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி வாக்காளர்கள் கூறுவதுண்டு. தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது இவ்வாறான சூழல் உருவாகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருக்கின்றது. ஒருவேளை தேசிய அரசாங்கம் ஆட்டம் காணுமானால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சிதறடிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்களின் மத்தியிலேயே தேசிய அரசாங்கத்தை உருவாக்கினர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதாவது நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தின் மீது வைத்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்துக்கொண்டு தற்போது தேசிய அரசாங்கம் ஆட்டம்காணப்போகின்றதா என்ற கவலையே அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது. அதாவது தீர்க்கப்படாத தமது நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவந்தனர். அதுமட்டுமின்றி மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது எதிர்பார்ப்புக்களை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையிலேயே புதிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்தனர். மேலும் காணாமல்போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டு வந்தனர். அதேபோன்று யுத்தகாலத்தில் காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இழந்த மக்கள் தமது காணிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தேசிய அரசாங்கம் உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் புதிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்தனர்.
அரசியல் அதிகாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் தமது அரசியல் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் தேசிய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்தனர். அதேபோன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு புதிய அரசாங்கம் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தேசிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்தனர். ஆனால் தற்போதைய நிலைமையில் இந்த அனைத்து எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்துக்கொண்டு தேசிய அரசாங்கம் எங்கே சிதறிவிடுமா என்ற அச்சம் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிகாரத்தில் இருக்கின்றோர் சிந்திக்கவேண்டும். அதிகாரத்தில் இருக்கின்றோர் தாம் ஐந்து வருடம் அதிகாரத்தில் இருப்பதற்காக தேசிய அரசாங்கத்தைப் பயன்படுத்துவதை விடுத்து மக்களின் நீண்டகால பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்பதை எப்போதும் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
இவ்வாறு மக்களின் தேவைகள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத நிலைமையிலும் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத சூழலிலும் தேசிய அரசாங்கம் ஆட்டம் காணுமானால் அது மக்கள் 2015 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்தை சவாலுக்குட்படுத்துவதாகவே அமையும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி விட்டு ஆட்சிக்கு வந்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு தேசிய அரசாங்கம் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் தேசிய அரசாங்கம் மிகவும் முக்கியமானது. நீண்டகால பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கு தற்போது சிறந்த சந்தர்ப்பம் அமைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசியல்தீர்வு உள்ளடக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு தற்போது தேசிய அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருக்கின்றது. ஒருவேளை தேசிய அரசாங்கம் ஆட்டம்காணுமானால் அந்த முயற்சியும் கைவிடப்படும் அபாயம் இருக்கின்றது. நீண்டகாலத்திற்குப் பின்னர் அரசியல் தீர்வை உள்ளடக்கிய மக்களின் பிரதிபலிப்புடன் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இங்கு கூறவருவது என்னவென்றால் இவ்வாறு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் ஏற்படவேண்டும். மக்களின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்காமல் தேசிய அரசாங்கம் ஆட்டம்கண்டால்அதுதொடர்பான குற்ற உணர்வு அரசியல்வாதிகளுக்கு ஏற்படவேண்டும். இந்த நாட்டில் நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வைக் காண்பதற்கு இதனைவிட சிறந்த சந்தர்ப்பம் அமையுமா என்பது கேள்விக்குறியாகும். அந்த சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். அதற்கு தேசிய அரசாங்கம் பதவியிலிருக்கவேண்டும். ஆனால் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது எங்கே தேசிய அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடுமா என்ற கேள்வி எழுகின்றது. அதுமட்டுமின்றி தேசிய அரசாங்கம் பதவியில் இருக்கின்ற நிலையில் நீண்டகாலப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் வெறுமனே காலம் மட்டும் இழுத்தடிக்கப்பட்டுக்கொ ண்டிருந்தால் அதிலும் அர்த்தமில்லை என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். எப்படியாவது பிரச்சினையைத் தீர்த்து நாட்டுக்கு விடிவை ஏற்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டியது அவசியமாகும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. முரண்பாடுகள் மற்றும் கருத்து மோதல்கள் இரண்டு தரப்புக்குமிடையில் வலுத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை சமநிலைப்படுத்தி தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கு இரண்டு கட்சிகளையும் வழிநடத்தவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் காணப்படுகின்றது. தமது எதிர்காலப் பொறுப்பை உணர்ந்து இரண்டு தலைவர்களும் செயற்படவேண்டும். நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் சுயநல அரசியலில் ஈடுபட்டுவிடக்கூடாது. மக்கள் தமக்கு எதற்காக அமோக ஆதரவை கடந்த இரண்டு தேர்தல்களிலும் வழங்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு இரண்டு தலைவர்களும் செயற்படவேண்டியது அவசியமாகும். எனவே தேசிய அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடுமா என்ற மக்களின் ஆதங்கத்தை கவனத்தில் கொண்டு தலைவர்கள் எதிர்காலத்திற்கு ஏற்றவகையிலான சிறந்த தீர்மானம் எடுக்கவேண்டும். எடுப்பார்களா?
ரொபட் அன்டனி