மனித உயிர்களை அலட்சியப்படுத்தியதன் வெளிப்பாடே புங்குடுதீவு விபத்து!

மைத்திரி – ரணில் கூட்டரசுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்த போது தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பது.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபடி மேலே போய் 1980களில் இருந்த நிலமைக்குப் படையினர் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், அது நடக்கவில்லை.
வடக்கில் உள்ள மக்களின் பரம்பலுடன் ஒப்பிடும்போது அளவுக்கதிகமான இராணுவத்தினர் இன்னும் இங்கு நிலை கொண்டுள்ளனர் என்கிற குற்றச்சாட்டுத் தொடர்ந்துள்ளது.
அத்தகைய நிலமையால் நேற்று முன்தினம் ஓர் அப்பாவிச் சிறுமியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது.
யாழ். தீபகற்பத்தைச் சுற்றியுள்ள தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் கடற்படையினரின் ‘பவள்’ கவச வாகனம் மோதியதில் திருலங்கன் கேசனா என்கிற 9 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த அந்தச் சிறுமிக்கு எமனாக வந்திருந்தது கடற்படையினரின் பவள் கவச வாகனம். இந்த விபத்தில் கேசனாவின் மாமனும் காயமடைந்தார்.
இதனைச் சாதாரண ஒரு விபத்தாகப் பதிந்துள்ள பொலிஸார் வழக்கம் போல வாகனத்தின் சாரதியைக் கைது செய்ததுடன் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் இந்தச் சம்பவத்தைச் சாதாரண விபத்துச் சட்டங்களின் கீழாக அல்லாமல் திட்டமிட்ட கொலைக் குற்றத்துக்கான சட்டங்களின் கீழ் விசாரணை செய்ய வேண்டும்.ஏனெனில் போர்க் காலங்களில் பயன்படுத்தப்படும் பவள் கவச வாகனத்தைச் சாதாரண நாள்களில் பயன்படுத்தி இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் இந்தப் பவள் கவச வாகனம் தடுப்பு உராய்வு (பிரேக்) இன்றி நீண்ட நாள்களாக ஓடித் திரிந்ததைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் உரிய கடற்படை அதிகாரிக்கு முறையிட்டதன் பின்னரும் அந்த வாகனத்தைச் சீராக்காமல் பொதுமக்கள் பயன்படுத்தும் வீதியில் ஓட அனுமதித்தது மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தியதன் வெளிப்பாடே.
எனவே வாகனச் சாரதிக்கு எதிராக மட்டுமன்றி அந்த வாகனத்தை வீதியில் பயணிக்க அனுமதித்த கடற்படை அதிகாரிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பை உதாசீனம் செய்தமை மற்றும் கொலை ஆகிய குற்றங்களின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நீதித்துறையும் காவல்துறையும் இது விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
புங்குடுதீவில் 4 ஆயிரம் வரையான மக்களே இருக்கின்ற போதும் அங்கு 6 கடற்படை முகாம்கள் இருக்கின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். அந்தப் படை முகாம்களில் சில நூற்றுக்கணக்கான படையினரே இருக்கின்ற போதும் தீவு முழுவதும் பரந்து கடற்படை முகாம்கள் ஆக்கிரமித்துள்ளன.
இவ்வாறு 6 முகாம்களை அங்கு வைத்திருப்பதற்கான பாதுகாப்புத் தேவைகள் ஏதும் இல்லாத போதும் அந்த முகாம்கள் திட்டமிட்டு ஏன் பேணப்படுகின்றன என்பதும் ஆராயப்பட வேண்டும்.
தீவகத்தில் காணப்படும் இவ்வாறான கனதியான படையினரின் இருப்பு, தீவக மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்பதையும் கவனிக்க வேண்டும்.
எனவே மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் இத்தகைய படை முகாம்களை உடனடியாகக் குறைத்து படையினரின் தேவையற்ற நடமாட்டத்தை நிறுத்த கொழும்பு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போருக்குப் பின்னர் வடக்கில் நடைபெற்ற விபத்துக்களில் கணிசமானவற்றில் படையினரின் வாகனங்களும் தொடர்புபட்டுள்ளன என்கிற விவரத்தையும் பார்க்கின்ற போது உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila