ஆயுத போராட்டம் மௌனித்த பின்னர் தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதி சீண்டும் இனவாதப் போக்கு அதிகரித்திருந்துள்ளது என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலய அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் ”ஊவா மாகாண முதலமைச்சர் தன்முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ளமை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதி உச்சநிலையாகும் .
ஆங்கிலேயர் கையில் இருந்து சிங்களர் கையிற்கு ஆட்சி-அதிகாரம் மாற்றமடைந்த பின்னர் சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலை இலங்கையின் சகல நிர்வாக மட்டத்திலும் கோலோச்சியிருந்தது. அதன் உச்சநிலையே முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய, மானுடமே வெட்கித் தலைகுனியும் தமிழினப்படுகொலையாகும்.
உலகம் ஆயிரம் சொன்னாலும் தமிழீழ விடுதலைப் போராட்டமே தமிழர்களின் காப்பரணாகத் திகழ்ந்து வந்தது என்பதை இது போன்ற நிகழ்வுகள் துலாம்பரமாக எடுத்தியம்பி வருகின்றது.
ஆயுத மௌனிப்பின் பின்னர் மீண்டும் தமிழர்களை கிள்ளுக் கீரையாக கருதி சீண்டும் இனவாதப் போக்கு அதிகரித்திருந்தது. அது தற்போதைய நல்லாட்சி அரசின் காலத்திலும் தொடர்வதையே தமிழ் ஆசிரியையை முழந்தாளிட்டு மன்னிப்புக் கேட்கவைத்துள்ள சம்பவம் காட்டிநிற்கின்றது.
ஊவா மாகாண முதலமைச்சரின் பரிந்துரைக் கடிதத்துடன் சென்றிருந்த குறித்த மாணவியரின் பெற்றோரிடம், கல்வி அதிகாரிகளின் உத்தரவுகள், வழிகாட்டுதல்களுக்கு அமையவே தன்னால் செயற்பட முடியும் என்று நியாயமான காரணத்தை கூறி திருப்பி அனுப்பியதில் தவறேதும் இருந்திருப்பின் நிர்வாக ரீதியில் விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
அதைவிடுத்து தனது இடத்திற்கு அழைத்து ஒருபெண் என்று கூடப்பாராது அவமரியாதையாக பேசியதோடு நின்றுவிடாது மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண செயலர் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் முன்னிலையில் முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்துள்ள செயல் இனவாதத்தின் உச்சநிலையாகும்.
இனத்துவேசம் மற்றும் அதிகார அத்துமீறலின் வெளிப்பாடாக குற்றமிழைத்ததுடன் நின்றுவிடாது உண்மையை வெளிப்படுத்த முடியாதளவிற்கு அச்சுறுத்தியும் உள்ளமை இலங்கை நாட்டில் தமிழர்நிலை எவ்வாறு உள்ளதென்பதற்கு சான்றாகும். உண்மைகள் வெளிப்படுத்தப்பட்ட பின்னரான எதிர்ப்புகளையடுத்து முதலமைச்சர் வசமிருந்த கல்வியமைச்சு பறிக்கப்பட்டு ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு மட்டுமல்ல முதலமைச்சர் பதவியும் அவரிடம் இருந்து உடனடியாக பறித்தெடுக்கப்படுவதுடன் அரசியலின் எந்தநிலையிலும் எக்காலத்திலும் அவர் பொறுப்பு வகிக்காதவாறு கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். மக்களை ஆளும்நிலையில் இவ்வாறான குரோத மனப்பாங்குள்ளவர்கள் இருப்பது பேராபத்தாகும்.
இந்நிலையானது, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக இலங்கை வரலாற்றை திசைமாற்றிவிடும் பேராபத்தின் அறிகுறியாகவே அமைந்துள்ளது. ஆகவே பெயரளவிற்கு இல்லாது உண்மையான நல்லாட்சியை இலங்கைத்தீவில் நிலைநிறுத்தும் வகையில் ஆட்சியாளர்கள் உளப்பூர்வமாக செயலாற்ற முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்