333ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்ற நிலையில் தமிழ் மக்கள் மீது தமிழ் கட்சிகளுக்கு அக்கரை இல்லையென போராட்டத்திலுள்ள மக்கள் அறிவித்துள்ளனர்.அத்துடன் இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் எவருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்கபோவதாகவும் அறிவித்துள்ளனர்.
கேப்பாபலவு மக்களது போராட்டம் சமரசமின்றி தொடர்கின்ற அதேவேளை மறுபுறம் தமிழரசுக்கட்சியின் பிரச்சாரக்கூட்டத்திற்கு சென்றிருந்த பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரால் உடல் எங்கும் துருவப்பட்டமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.சுமந்திரன் பங்கெடுக்கும் பிரச்சாரக்கூட்டமென கூறப்பட்டு ஆண் பெண் வேறுபாடின்றி இத்துருவுதல் சோதனை நடந்துள்ளது.முன்னர் சிங்கள ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் வருகை தருகின்ற போது நடத்தப்பட்ட பணியில் சோதனை நடத்தப்பட்டுள்ளமை மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி ,பிரதமரென அனைவரும் சாதாரணமாக நடமான தமிழரசுக்கட்சியினர் காட்டும் பாதுகாப்பு கெடுபிடிகள் ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது.
இதனிடையே தமிழ் கட்சிகள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதுபோல் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என கேப்பாப்புலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலையில் அந்த காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் கருத்து வெளியிடுகையில், கடந்த 1ஆம் திகதி ஒரு தொகுதி மக்கள் கேப்பாப்புலவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர், ஆனாலும் அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள். மேலும் கேப்பாப்புலவில் உள்ள இராணுவத்தினர் வெளியேர வேண்டும், நாங்கள் அனைவரும் எமது பூர்வீக மண்ணில் மீள்குடியேர வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்கள் இன்று 333ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் அரசியற்கட்சிகள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதில் அக்கறை செலுத்தவில்லை. அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவதிலே கவனம் செலுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.