வட தீபகற்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை

9ஆவது தடவையாக ஆரம்பமாகும் இந்த வருடாந்த வர்த்தக கண்காட்சி வட தீபகற்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
9ஆவது யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று பிரம்மாண்டமான முறையில் ஆரம்பமாகி உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
9ஆவது தடவையாக ஆரம்பமாகும் இந்த வருடாந்த வர்த்தக கண்காட்சி வட தீபகற்பத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை.
நான் கடந்த ஓரிரு நாட்களாக சென்ற இடங்களில் எல்லாம் இவர்களின் பதாகைகளும், துண்டுப்பிரசுரங்களும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்தேன்.
இந்த வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 350 வரையான காட்சிக்கூடங்கள் இடம்பெறவிருக்கின்றன என அறியத்தரப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு காட்சிக் கூடமும் ரூபா 80,000 வரையில் பணம் கட்டியே பெறப்பட்டதாக அறிந்தேன்.
இன்று சரவ்தேச அளவில் இலங்கை ஒரு மத்திய வருவாயுடைய நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த குறியீட்டினுள் வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை வகைப்படுத்தப்பட முடியாதுள்ளது.
நீண்டகாலப் போரினால் முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ள இந்த பிரதேசங்கள் அடிப்படை மட்டத்திற்கும் மிகக் கீழேயே இருக்கின்றன.
இவற்றை அடிப்படை மட்டத்திற்கேனும் கொண்டு வருவதற்கு விரைந்து செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு மத்திய அரசாங்கம், மாகாண அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற வேளையில் மக்கள் விபரிக்க முடியாத இன்னல்களை அனுபவித்த போதும் அவரகளின் கைகளில் தேவைகளுக்கு போதுமான பணம் இருந்தது. யுத்தம் முடிவுற்று இயல்பு நிலை திரும்பியதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள்.
ஆனால் அது நீடித்து நிலைக்கவில்லை. பிறநாட்டுக் கம்பனிகளும் நிதி நிறுவனங்களும் சரவ்தேச தரத்திலான வர்த்தக நிறுவனங்களின் உள் நுழைவும் இப் பகுதியில் உள்ள நிதி மற்றும் மூலதனங்களை முழுமையாகச் சுரண்டி சென்றுவிட்டன.
நிதி நிறுவனங்களின் ஆசை வாரத்தைகள் எம்முள் பலரைக் கடனாளிகள் ஆக்கின. அவர்களின் மிகை வட்டி அறவீடுகளின் காரணமாக அனைத்துத் தர மக்களும் இன்று கடனாளிகளாக காணப்படுவதுடன் ஒரு சிலர் தமது இன்னுயிர்களையும் மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் மனதிற்கு வேதனையைத் தருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila