யுத்தத்தின பெரும்பாதிப்புக்களினை சந்தித்த வடக்கு ஊடகத்துறையினை மீளக்கட்டியெழுப்பவென சர்வதேச நாடுகளால் ஒதுக்கப்பட்ட பல கோடி நிதி யாழ்.பல்கலைக்கழகத்தில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
சர்வதேச தரப்பின் உதவியூடாக முன்னெடுக்கப்பட்ட கட்டுமரமெனும் இணைய வெளியிடுகை மூலமே இம்மோசடிகள் இடம்பெற்றமை அம்பலமாகியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் அதாவது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் கிடைக்கப்பெற்ற வெளிநாட்டு நிதியுதவியுடன் காலப்பகுதி முடிவடைந்ததால் அதனுடைய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.
இச் செயற்பாட்டின் நிறுத்தம் பற்றி பொது நிறுவனங்களை ஆராயும் பாராளுமன்றக்குழுவான “கோப்” குழுவுக்கு பல்கலைக்கழகத்தினால் முறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அதற்குப் பின்னரும் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளராக இருந்த தே.தேவானந்த் என்பவர் அந்தப் பெயரை தொடர்ச்சியாக பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடாத்தி வருவதாகவும் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் தற்போது தெரியவருகின்றது.
ஆனால் கோப் குழுவிற்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இந்த ஊடக வழங்கள் மற்றும் பயிற்சி நிலையம் தனது செயற்பாடுகளை நிறுத்தியதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதன் முன்னாள் பணிப்பாளர் எவ்வாறு இந்த பெயரைப்பயன்படுத்தி நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க முடியுமென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அத்துடன் அதனூடாக யாழ் பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி பெறப்பட்டிருக்கக்கூடிய பல கோடி ரூபாய் நிதி தொடர்பான கணக்குகள் யாழ்.பல்கலைக்கழக கணக்குகளை தாண்டி வெளியார் யாரிடம் போய் சேர்ந்தது பற்றி மிகப் பெரும் வினாக்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
ஊடகவளங்கள் செயற்பாடு நிறுத்தப்பட்ட வேளை பணிப்பாளராக இருந்த தே.தேவானந்த் தற்போது யாழ்.மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களது இணையத்தின் தலைவராக உள்ளார்.அவரே இதன் குறித்த கட்டுமரமெனும் நிகழ்ச்சி திட்டத்தின் முகவராக முன்னதாக யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பணிப்பாளராக இருந்தவேளை தமிழ் பிரிவிற்கான கடமைகளை ஆற்றிவந்திருந்தார்.தற்போது அவரால் பல கோடி ரூபாய் நிதி வடக்கு ஊடகவியலாளர்கள் பெயரில் மோசடியாக கையாளப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறித்த கட்டுமர இணையத்தளத்தின் தகவலின்படி குறித்த வெளிநாட்டு நிறுவனத்துடன் கொழும்பில் உள்ள ஒரு சில பத்திரிகை நிறுவனங்களும் யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையமும் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை தொடர்ந்தும் தற்போது நடாத்தி வருவதாக அந்த குறிப்பிட்ட இணையத்தள தகவலின் மூலம் அறியக்கிடைக்கின்றது.
குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிகள் சிலரிற்கும் உள்ளுர் நாளிதழ் ஒன்றின் பிரதம ஆசிரியருக்கும் இதன் பின்னார் பெரும் பங்களிப்புக்கள் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
வடக்கு ஊடகவியலாளர்களை புறந்தள்ளி முற்றுமுழுதாக கட்சி ஆதரவாளாகளதும் சமூக ஊடக பதிவர்களிற்குமான ஒரு பயிற்சி தளத்தை கட்டுமரம் பெயரில் அரங்கேற்றவந்தமை தொடர்பில் உள்ளுர் ஊடக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.