மகிந்தவை நோக்கி சம்பந்தன் கூறிய, தாமரை மொட்டினாலேயே ஈழம் மலரும் என்பதை, ஒவ்வொரு வருடமும் ”இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு வரும்” என்ற அவரது நம்பிக்கை வாக்கின் இரண்டாம் வரியாகச் சேர்த்துக் கொள்ளலாமே தவிர இதில் குறிப்பிட வேறொன்றுமில்லை.
ஒவ்வொரு தடவையும் ஜெனிவா கூட்டக்காலம் நெருங்கும்போது, இம்முறை இலங்கைக்கு நெருக்குதல் அதிகரிக்குமென்று கூறுவது நிரந்தர வாய்ப்பாட்டில் ஒன்றாகிவிட்டது.
அடுத்த இரண்டு மாதங்கள் தாண்டினால், முள்ளிவாய்க்காலின் ஒன்பது ஆண்டுகள் பூர்த்தி மாதம் வந்துவிடும்.
இந்த ஒன்பதாண்டுக் காலத்தில் சர்வதேச அரசியலாயினும் சரி, பூகோள அரசியலாயினும் சரி தமிழருக்கு அவர்களின் சொந்த மண்ணில் இழைக்கப்பட்ட அநீதிக்கு என்ன தீர்வு பெற்றுத் தந்தது?
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வன்னியில் நடத்தும் போராட்டமும் ஓராண்டைப் பூர்த்தி செய்துவிட்டது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதனைத் தொடர்ந்து நடத்த முடியும்?
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர், முன்னாள் பிரித்தானியப் பிரதமர் உட்பட எத்தனை வெளிநாட்டுப் பிரமுகர்களும் ராஜதந்திரிகளும் இவர்களைச் சந்தித்து எத்தனை உறுதிமொழிகளை வழங்கினர்.
இவற்றுள் ஏதாவது நடைமுறைப்படுத்தப்பட்டனவா?
மகிந்த ராஜபக்ச காலத்திலிருந்து, இன்றைய மைத்திரி – ரணில் காலம்வரை உருவாக்கப்பட்ட விசாரணைக் குழுக்களும், அவற்றின் அறிக்கைகளும் எங்கே போயின?
சர்வதேசத்தின் கண்களைக் கட்டவென காணாமலாக்கப்பட்டவர்களுக்கென உருவாகிய அலுவலகம் என்ன செய்கிறது? யாருக்காக இது இயங்குகிறது?
காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். தேடிக் கண்டுபிடித்துத் தருகிறேனென்று சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அந்த உறவுகளுக்கு சொன்னதைக் கேட்டபோது சிரிப்புதான் வந்தது.
கோழி அறுத்த கள்ளனும் கூட நின்று தேடினானாம் என்ற கதைதான் இது.
இந்தமாத முற்பகுதியில் வடக்கே தேர்தல் பரப்புரைக்குச் சென்ற மைத்திரி திடீர் கனவு கண்டவர்போல புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
காணாமல் போனவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் தனக்குத் தெரிந்தவரையில் எங்குமே இல்லையென்பதே அவரது பதில்.
இல்லை என்ற பதில் பல்பொருள் கொண்டது.
அப்படியாக எவரையும் அரசாங்கம் எங்கும் தடுத்து வைத்திருக்கவில்லையென்பது ஓர் அர்த்தம்.
அப்படியான எவரும் இப்போது உயிருடன் இல்லையென்பது இதன் மற்றைய அர்த்தம்.
முள்ளிவாய்க்காலில் யுத்தம் உச்சம் பெற்று தமிழர் தரப்பின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபோது, மகிந்த ராஜபக்ச வெளிநாடொன்றில் தங்கியிருந்தார். (உள்நாட்டில் உயிராபத்து ஏற்படுமென அவரது சோதிடர்கள் கூறியதால் அவர் வெளிநாடு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சிகள் கூறின).
அப்போது பாதுகாப்புப் பதிலமைச்சராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரியே.
அந்தவகையில், காணாமலாக்கப்பட்டோர் கொல்லப்பட்டனரா என்ற கேள்விக்குப் பதில் கூற வேண்டிய தார்மிகக் கடப்பாடு அவருக்குண்டு.
அதனாற்தானோ என்னவோ, அப்படியாக எவரும் இப்போது இல்லையென்று திட்டவட்டமாக இவரால் கூற முடிகின்றதுபோலும்.
இதுதான் இலங்கை அரசாங்கத்தின் இறுதிப் பதில் என்றால், ஜெனிவாவுக்கும் அப்பால் இவ்விவகாரத்தைக் கொண்டு செல்ல வேண்டிய காலமும் நேரமும் வந்துவிட்டதென்பதை அக்கறையுள்ள ஒவ்வொருவரும் நினைவிற் கொள்ளவேண்டும்.
இந்தப் பூனைக்கு மணிகட்டப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது?
நல்லாட்சியின் பாதுகாவலனாகவும், காப்பாளனாகவும் செயற்படும் கூட்டமைப்பு இதனைச் செய்யாது என்பதை நிச்சயமாகக் கூற முடியும்.
தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியம் என்று பேசிக் கொள்ளும் மற்றையவர்களால் ஏன் இதனை மேற்கொள்ள முடியாது?
எதையும் தேர்தல்கால செயற்பாடுகளாகவோ, அல்லது அரசியலுக்கானதாகவோ பார்க்காது, இதில் முனைப்புக் காட்டும் விடயத்திலாவது தங்களைத் தமிழ் தேசியவாதிகள் என்று கூறுபவர்கள் ஒன்றுபட வேண்டும்.
இராணுவத்தின் பேருந்தில் மற்றைய போராளிகளுடன் தமது கணவரையும் கையளித்த அனந்தி சசிதரன் வடமாகாண சபையில் ஓர் அமைச்சராக இருக்கிறார்.
தம்மால் கையளிக்கப்பட்ட கணவரை இப்போது இல்லையென்று ஜனாதிபதி எவ்வாறு கூற முடியும் என்ற இவரது நியாயமான கேள்வியொன்றே, அரசாங்கப் படைகளை போர்க்குற்றத்தின் முன்னால் நிறுத்தப் போதுமானது.
ஆனால், இவை எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளிவிட்டு, உள்;ராட்சி சபைத் தேர்தல் எதிர்விளைவுகள் அல்லவா இப்போது முதன்மை பெற்று நிற்கிறது.
இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளினதும் அனைத்துச் செயற்பாடுகளையும் இந்தத் தேர்தல் புரட்டிப் போட்டுள்ளது.
ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்க முயற்சி எடுக்கப்பட்டது. மகிந்தவின் ஆதரவு அணியை மைத்திரியுடன் இணைத்து புதிய ஆட்சி உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
நல்லாட்சியிலிருந்து விலகி, தனியான ஐக்கிய தேசியக் கட்சி அரசை நிறுவ ரணில் தரப்பு முயற்சி செய்தது.
சுதந்திரக் கட்சியின் நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கி தனியான சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்க மைத்திரி திட்டமிட்டார்.
சம்பந்தனை எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவியை தமது பொதுஜன முன்னணிக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை மகிந்த பகிரங்கமாகவே விடுத்தார்.
அரசாங்கத்துக்கெதிராக ஒருபோதும் வாயே திறக்காத கூட்டமைப்பு எவ்வாறு எதிர்க்கட்சியாக இயங்க முடியுமென்பது இவரது கேள்வி.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் வாக்கைப் பெற்றுக்கொடுத்ததற்காகவும், அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காகவும் வெகுமதியாக வழங்கப்பட்டது எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பதால், இவர்களால் எவ்வாறு அவர்களுக்கு எதிராகச் செயற்பட முடியும்?
பிணைமுறி ஊழல் விவகாரத்தில்கூட பிரதமருக்கெதிராக மூச்சு விடாதிருந்தவர்கள் கூட்டமைப்பினர்.
கடந்த வாரக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டதுபோல, ரணிலைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
மகிந்த பதவி ஆசை காரணமாக, பதினெட்டாவது அரசியல் திருத்தத்தை நிறைவேற்றி மூன்றாம் தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்வினார்.
அத்தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரி, முதல் வேலையாக பதினெட்டாவது திருத்தத்தை ரத்துச் செய்து, பத்தொன்பதாவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
அந்தத் திருத்தமானது பிரதமர் ரணிலுக்கு வழங்கப்பட்ட ஆயுட்காப்புறுதி என்பதை மைத்திரி தெரிந்திருக்கவில்லை அல்லது புரிந்திருக்கவில்லை.
பத்தொன்பதாவது திருத்தத்தின் கீழ் பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியாது. பிரதமர் பதவியிலிருந்து விலகினால், அல்லது பதவியிலிருக்கும்போது இறந்தால், அல்லது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் மட்டுமே அவரை நீக்கலாமே தவிர, அவர்மீது கைவைக்க சட்டத்தில் இடமில்லை.
இதனை இந்த வாரம்தான் மைத்திரி அறிந்து கொண்டாரென்பது அவருக்கிருக்கும் அரசியல் அமைப்புச் சட்ட சூனியத்தையே புலப்படுத்துகிறது.
எனினும், ரணிலின் கீழுள்ள அதிகாரங்களைத் தமதாக்கி அல்லது வேறு அமைச்சர்களுக்கு வழங்கி அவரைப் பலமிழக்கச் செய்ய முடியும். இதனையே இப்போது செய்வதற்கு மைத்திரி முனைகின்றார். சிலவேளைகளில் இதனைப் படிக்கும்போது இந்த மாற்றங்கள் வந்தும் இருக்கலாம்.
ஓரளவுக்காவது தமது சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவு ஏற்படாமல் தடுக்கவும், மகிந்த தரப்பை அணைக்கவும் இந்த மாற்றம் மைத்திரிக்கு அவசியமாகின்றது.
ரணிலின் நண்பரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ச்சுன மகேந்திரன் பிணைமுறி ஊழலில் சிக்கிய பின்னர் தலைமறைவாகியிருக்கிறார். இவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் இலங்கையின் உயர் ஸ்தானிகராகவிருக்கும் அமாரி விஜேவர்த்தன திடீரெனப் பதவி விலகுவதும் இப்படியான ஒன்றுதான்.
ரணிலின் தாயார் நளினி விஜேவர்த்தனவின் ஒன்றுவிட்ட சகோதரியே அமாரி விஜேவர்த்தன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ரணிலின் உள்வட்டத்தைச் சேர்ந்த பல உயர்மட்ட அதிகாரிகள் சங்கீதக் கதிரைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
நல்லாட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த இழுபறி கூட்டமைப்பு எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்புத் திட்டம், அதற்கான இடைக்கால அறிக்கை அனைத்தையும் கிடப்புக்குள் தள்ளுகிறது.
இதனை ஓர் அவலச் செய்தியாக தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இப்போது மாறிவரும் அரசியல் சூழ்நிலையில் யார்தான் தலையால் நடந்தாலும், தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கு எதுவுமே சாதகமாக அமையும் தோற்றம் காணப்படவில்லை.
மகிந்தவை நோக்கி சம்பந்தன் கூறிய, “தாமரை மொட்டினாலேயே ஈழம் மலரும்” என்பதை, ஒவ்வொரு வருடமும் “இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு வரும்” என்ற அவரது நம்பிக்கை வாக்கின் இரண்டாம் வரியாகச் சேர்த்துக் கொள்ளலாமே தவிர இதில் குறிப்பிட வேறொன்றுமில்லை.
மகிந்தவின் அரசியல் சித்து விளையாட்டுகளால் அல்லாடுகிறது நல்லாட்சி, தள்ளாடுகிறது எதிர்க்கட்சி (கூட்டமைப்பு) என்று எவராவது சொன்னால், அதில் எந்தத் தவறுமிருக்க முடியாது.
இதுவே இன்றைய யதார்த்தம்!