அரசியல் சார்ந்த குழுவினர் திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்ட சதிநடவடிக்கையினாலேயே அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. இதில் சம்பந்தப்பட்டிருக்கின்ற அரசியல் சார்ந்த அந்த சூத்திரதாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக சகல பிரஜைகளினதும் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனை யாரும் மீறமுடியாது. அந்தவகையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும். இந்த அரசியல் சதியின் பின்னணியில் இருப்பவர்கள் தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, சரத் அமுனுகம, மற்றும் கபிர் ஹசீம் ஆகியோர் இந்த விடயங்களை அறிவித்தனர்.
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன கருத்துத் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்பப்படுகின்றது. இந்த விடயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி நான் உள்ளிட்ட சில அமைச்சர்களை சந்தித்து இந்த விடயம் குறித்து ஆராய்ந்தார்.
இதன் போது சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அரசியலமைப்பின் 28 ஆவது பிரிவிற்கமைய இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சாசனத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம்.
மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் குற்றவியல் தண்டனையின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம். கருத்து சுதந்திரத்தை ஏற்கிறோம். ஆனால் வன்முறையை ஏற்படுத்தும் கருத்துக்கூறுவதை ஏற்கமுடியாது. இது தொடர்பில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்.
தற்போது திகன அசம்பாவிதங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் ஒரு அரசியல் கட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள். இதில் நான்குபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர், ஒரு மாவட்ட அமைப்பாளர், ஒரு அரசியல்வாதியின் செயலாளர் என பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த ஒரு பிக்குவும் உள்ளார். திட்டமிட்டு இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். கடந்த தேர்தலில் சிறுபான்மை மக்கள் அரசாங்கத்திற்கே வாக்களித்தனர்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒருசிலர் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களின் ஆதரவை இல்லாமல் செய்வதற்கே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.