தமிழர்களின் பெருமளவு நிலம் அபகரிக்கப்படும் அபாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவு நிலப்பகுதியை மகாவலி அதிகாரசபையின் செயற்றிட்ட பகுதிக்குள் உள்ளடக்கி மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான திட்டமிடல்கள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பெருமளவு நிலம் அபகரிக்கப்பட்டு தமிழ் மக்கள் வெளியேற்றப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தமிழ் மக்களுடைய நிலத்தில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்க வடமாகாண ஆளுநர் தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறார்.
ஆனாலும் வீடுகளை வழங்குவதற்கு நிரந்தர காணிகள் இல்லாமையினால் கொக்கிளாய் பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணி என அடையாளப்படுத்தி கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு வழங்க முயற்சிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது காணிகளை துப்பரவாக்கி வேலிகளை அமைத்துள்ளார்கள். இதனால் அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இரகசிய கூட்டம் ஒன்று காணி சம்மந்தமாக நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், மத்திய காணி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலர் உள்ளிட்ட பெருமளவு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மகாவலி அதிகாரசபை தற்போது கலியாணபுர என்ற இடத்துடன் நிற்கும் தமது செயற்றிட்ட பகுதியை நாயாறு ஆண்டான்குளம், நித்தகைகுளம் உள்ளிட்ட பெருமளவு தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருப்புக்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த விரிவுபடுத்தலுக்கு 'மாயபுர' என பெயரிடப்பட்டிருக்கின்றது. மகாவலி அதிகாரசபைக்கு அதன் செயற்றிட்ட பகுதிக்குள்ளேயே அதிகாரம் அதிகமாக பயன்படுத்த முடியும்.
அவ்வாறு செயற்றிட்ட பகுதியாக இதுவரை இருந்த பகுதிகளுக்குள் தமிழ் மக்களுடைய காணிகள் பறிக்கப்பட்டு அந்த நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நாயாறு, ஆண்டான்குளம், நித்தகைகுளம் உள்ளிட்ட மேலும் பல தமிழ் கிராமங்களை உள்ளடக்கி மகாவலி அதிகாரசபையின் செயற்றிட்ட பகுதி விஸ்த்தரிக்கப்பட்டால் பெருமளவு தமிழ் கிராமங்கள் சிங்கள மயமாக்கப்படுவதுடன், அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டு கேணி ஆகிய கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,
எங்களுடைய பெருமளவு காணிகள் ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் நாங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிலங்களையும் அபகரித்து சிங்கள மக்களுக்கு கொடுப்பதற்கு பாரிய திட்டம் தீட்டப்படுவதாக நாங்களும் அறிகிறோம்.
இந்த நடவடிக்கை தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் உறுதியானதும், அக்கபூர்வமானதுமான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேபோல் மக்கள் நாங்கள் ஒன்றிணைந்து மேற்படி அபகரிப்புக்கு எதிராக சாத்வீக வழியில் போராட்டம் நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். அதிலும் தமிழ் அரசியல் தலமைகள் கலந்து கொண்டு இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும் என்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila