இலை மலர்ந்தது! ஆனால் ஈழம் மலரவில்லை! குமரியில் ஒலித்த ஈழத் தமிழர் குரல்!

விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றம் சாட்டப்பட்ட ஈழத் தமிழர் மகேந்திரன் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தபட்டார். பலத்த பாதுகாப்போடு திருச்சி காவல்துறையினர் அவரை அழைத்து வந்தனர்.
நீதிமன்ற வளாகத்தில் வந்தபோது திடீரென மகேந்திரன், 'பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை, நிவாரண வசதிகள் எதும் இல்லை, பெண்கள் கருமுட்டை விற்று வாழும் சூழலே அகதிகள் முகாமில் உள்ளது' என கோஷமிட்டார்.
குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜர்படுத்தப்பட்டார் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து வழக்கு பெப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்திற்கு வெளியே வரும் போதும் அதே கோஷத்துடனேயே வெளியே வந்தார். அவரை காவல்துறையினர் வேகமாக வானில் ஏற்றும் போதும், 'பொய் வழக்கு போட்டுள்ளனர். ஈழ தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இது குறித்து மகேந்திரன் தரப்பில் பேசியபோது,
கடந்த 27.7.2014 அன்று குமரி மாவட்டம் களியக்காவிளை அகதிகள் முகாமில் இருந்து 13 பேர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர். அவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின் ஏஜென்ட் மூலமாக பெயின்ட் வேலைக்கு, கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து திசையன்விளைக்கு அழைத்து வரப்பட்ட மகேந்திரன், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 6.8.2014 அன்று கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 14 பேரில் 10 பேருக்கு 2014ல் ஜாமீன் கொடுக்கப்பட்டது. மகேந்திரன், சுபாஷ், இராஜேந்திரன், யுகபிரியன் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக ஜாமீன் மறுக்கப்பட்டது.
ஆனால் மகேந்திரன், அகதிகள் மேல் பொய் வழக்கு போடுவதையும், அவர்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தியும் குரல் கொடுத்ததால், ஜாமீன் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டம், கீழ்கூத்து முகாம், காட்டுமன்னார்குடி, குறிஞ்சிப்பாடி, குள்ளம் சாவடி, விருத்தாசலம் போன்ற அகதிகள் முகாமிலும், சென்னை புழல், கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் எவ்வித நிவாரணங்களோ, அரசு உதவிகளோ, இலவச பொருட்களோ எதும் கொடுக்கப்படவில்லை.
உளவு பிரிவு காவல்துறையினர் தவறான தகவலை அரசுக்கு கொடுத்து, எங்கள் வாழ்வாதாரங்களை பாதிப்படைய செய்கின்றனர். கழிப்பிட வசதியை கூட செய்து தர அரசு முன்வரவில்லை.
பெண்கள் கருமுட்டை விற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலை, குறைந்த சம்பளத்தில் வேலை, விதவை பென்சன் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் மட்டும் அகதிகள் மேல் அதிக வழக்கு போடுவதை கண்டித்து திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில், மகேந்திரன் 23.12.2015 அன்று தொடர்ந்து நான்கு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
உடனே தனித்துறை ஆட்சியர், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் எனக் கூறினார். ஆனால் நிறைவேற்றவில்லை.
எனவே கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தில் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
28ம் தேதி இராமநாதபுரம் திருவளுனை நீதிமன்றத்திலும், இன்று குழித்துறை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு 7 நீதிமன்றங்களில் நடக்கிறது.
இலை மலர்ந்தால், ஈழம் மலரும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இலை மலர்ந்தது, ஆனால் ஈழம் மலரவில்லை என்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila