ஊழல் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டனர் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தொடர்ந்தும் பேசிய அவர்,
தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் வெளிப்படும்போது கடந்த அரசாங்கத்தில் சகல துறைகளிலும் இடம்பெற்ற ஊழல்கள் யாவும் மறைக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே எதிரணியினர் இந்த விடயங்களை தமக்கு சாதககமாக பயன்படுத்தி அரசாங்கத்தின் மீது குறை கூறி வருகின்றனர்.
ஊழல் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டனர். இதன் காரணமாகவே மக்களுக்கு இன்று தேசிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி தோன்றியுள்ளது.
தேசிய அரசாங்கமானது தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. கட்சிகளின் தனிப்பட்ட கொள்கைகளை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை.