ஹிட்லராக மாறி, இராணுவ ஆட்சியையேனும் ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவதற்கு கோத்தபாய ராஜபக்ச முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரான வென்டருவே ஸ்ரீ உபாலி தேரரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் வகையிலேயே தலைமை அமைச்சராலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தேரரின் அனுசாசன உரைக்கு தலைமை அமைச்சர் எதிர்ப்பை வெளியிட்டார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றபோது அனுசாசன உரை நிகழ்த்திய அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை அறிவுரையே தெற்கு அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.
தேரரின் உரைக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கடந்த 21 ஆம் திகதி கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
‘எனக்கு முதுகெலும்பில்லை. இயலாத தலைவன் என்றெல்லாம் சிலர் விமர்சிக்கின்றனர். இந்த நாட்டுக்கு ஏகாதிபத்திய ஆட்சியாளரொருவர் தேவையென மகாநாயக்க தேரரொருவர் அறிவிப்பு விடுத்துள்ளார். இது தவறான அறிவிப்பாகும். நாடு சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்ததால்தான் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மக்கள் மாற்றமொன்றை ஏற்படுத்தினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன். இன்று எனக்கு சொல்லப்படும் கதைகள்தான் அன்று பண்டாரநாயக்கவுக்கு எதிராகவும் கூறப்பட்டது. இத்தகைய கதைகளைக் கூறித்தான் பண்டாரநாயக்கவை கொலைசெய்தனர். தற்போது அந்த செயற்பாடு மீண்டும் தலைதூக்கி வருகின்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே தலைமை அமைச்சர் ரணிலால் நேற்றுமுன்தினம் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தலைமை அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
‘ஹிட்லராகுமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புத்தபெருமான எமக்கு உபதேசம் வழங்கவில்லை. ஜேர்மனியிலும் பௌத்த தர்மத்தைப் போதிக்கும் நிறுவனங்கள் செயற்பட்டன. ஹிட்லர் ஆட்சிக்குவந்த பிறகு மேற்படி நிறுவனங்கள் கலைக்கப்பட்டன. அதில் இருந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இறுதியில் அவர்கள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ஹிட்லரையும், பௌத்த தர்மத்தையும் எவ்வாறு ஒன்றாக இணைத்துப் பயணிப்பது எனத் தெரியவில்லை. ஹிட்லர் வழி நடப்பது எமது தர்மத்துக்கு எதிரானது. எம்மிடையே அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது தவறில்லை. எப்படியானவர்களுக்கு வாக்களிக்கவேண்டுமென்பது புத்ததர்மத்தில் உபதேசிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இடி அமீன், ஹிட்லர் ஆகியோர் போன்று மாறுமாறு கூறமுடியாது. அது தவறானது. கண்டிக்கப்படவேண்டியது.
நான் பங்கேற்ற நிகழ்வொன்றின்போது இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டிருக்குமானால், ஊடகங்கள் என்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும். அந்நிகழ்வில் வெளியிட்டப்பட்ட தகவல் செய்தியாகக்கூட வெளிவரவில்லை. மறைக்கப்பட்டது. ஆசிரியர் தலையங்கங்கள்கூட எழுதப்படவில்லை. இப்படியே இவ்வாறென்றால், ஹிட்லரொருவர் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்? – என்றார் ரணில்.