கடலட்டை விவகாரம்; வடமராட்சி கிழக்கில் நடப்பது என்ன?!

வடமராட்சி கிழக்கில் கொள்ளை போகிறது நம் கடல்வளம். தடுக்க வேண்டிய அதிகாரிகள்தான் இதற்குத் துணைபோகிறார்கள் என்றால் கடற்றொழில் சங்கங்கள் – சமாசம் – சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் – ஏன் நம் மீனவர்கள் சிலர்கூட இந்த வளச்சுரண்டலுக்கு உடந்தையாக இருப்பதுதான் வேதனை.
வடமராட்சி கிழக்கு யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பிரதேசம். மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரை சுமார் 53 கிலோமீற்றர் நீண்ட கடற்கரைப் பரப்பைக் கொண்டது. அள்ள அள்ளக் குறையாத வளத்தைக் கடல் அள்ளிக் கொடுக்கிறது. இந்த வற்றாத வளத்துக்கு இயற்கை மட்டுமல்ல இப்பிரதேசத்தவர்களும்தான் காரணம். கடல் அட்டை பிடிப்பிலோ அல்லது சட்டவிரோத மீன்பிடிப்பிலோ இப்பிரதேசத்தவர்கள் ஈடுபடுவதில்லை.
 அண்ணாமலை - வடமராட்சி கிழக்கு கடலோடிகள் சங்கத்தின் பேச்சாளர்
அண்ணாமலை – வடமராட்சி கிழக்கு கடலோடிகள் சங்கத்தின் பேச்சாளர்
‘நாம் கடல் அட்டை பிடிப்பில் ஈடுபடுவதில்லை. வலையில் பிடிபடும் அட்டைகளையே எடுப்போம். இந்தக் கடல்வளம் எம் முன்னோர்கள் எமக்குத் தந்தது. இதை அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்க வேண்டும். தென்னிலங்கை மீனவர்களுக்கு மட்டுமல்ல இந்திய மீனவர்களுக்கும் இங்கு இடமில்லை. எங்கள் கடல் எங்களுக்கு மட்டும்தான் சொந்தம். இன்று எங்கள் கடல்வளத்தை பாதுகாக்க நீரியல் வளத் திணைக்களம் தவறிவிட்டது” என்கிறார் வடமராட்சி கிழக்குக் கடலோடிகள் அமைப்பின் பேச்சாளர் அண்ணாமலை.
உள்ளதுடன் அடுத்து சிங்களவர்களும் புத்தளம் உடப்பைச் சேர்ந்த குறைந்தளவிலான தமிழர்களும் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிலங்கையர் அமைத்துள்ள வாடி வீடுகள்
தென்னிலங்கையர் அமைத்துள்ள வாடி வீடுகள்
கடல் அட்டை பிடிப்புக்காக வந்த இவர்கள் வடமராட்சி கிழக்கின் கடற்கரைப் பகுதியில் வாடி அமைத்துத் தங்கியுள்ளனர். இந்தக் கடற்கரைப் பகுதியில் சுமார் 1,500 வரையிலான வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200 மீற்றர் வலயம் – சுனாமி அனர்த்தத்தின் பின்னரான சட்டம் – கடற்கரைப் பகுதியில் வாடி அமைப்பதற்கான இடத்தை சாதகமாக்கியது. குவிந்து கிடக்கும் இந்த வாடிகளில் ஒன்றில் 12 – 15 பேர் வரை தங்கியுள்ளனர். அத்துடன் மூவருக்கு ஒரு படகு என்ற அடிப்படையில் இவர்கள் கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கடல் அட்டை பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியவர்கள் யார்? என நீரியல் வளத்திணைக்களப் பணிப்பாளர் சுதாகரனிடம் வினவினோம். அவர்கள் கொழும்பில் – தலைமையகத்திலேயே அனுமதி பெற்றனர். தமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். வாடி அமைப்பதற்கு பிரதேச செயலரின் அனுமதியைப் பெற்றால் போதுமானது. வரும் 23 ஆம் திகதிக்குள் வாடிகளை அகற்ற பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறினார்.
கோடிகள் கொழிக்கும் கடல் அட்டை பிடிப்பு
கடல் அட்டைகள் ஏற்றப்படுகின்றன
கடல் அட்டைகள் ஏற்றப்படுகின்றன
கடல் அட்டைகள் அதிகம் கிடைக்கும் காலப் பகுதி இதுவாகும். சர்வதேச சந்தையில் கடல் அட்டைக்குப் பெரும் கிராக்கி காணப்படுகின்றது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ கடல் அட்டை தரத்தைப் பொறுத்து 435 தொடக்கம் 1,000 டொலர்கள் வரை (இலங்கை மதிப்பில் 69,000 – 160,000 ரூபா) விற்பனையாகிறது. கடல் அட்டை சேகரிப்பாளர்கள் ஒரு கிலோ 20 ஆயிரம் ரூபா தொடக்கம் விற்பனை செய்கிறார்கள். சுமார் 5 மாத காலம் (ஏப்ரல் – ஒக்ரோபர் வரை) தங்கியிருக்கும் இவர்கள் கடல் அட்டை சேகரிப்பு மூலம் மட்டும் கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற முடியும்.
இது மட்டுமல்ல, ஏப்ரல் மாதம் தொடங்கினால் தென்னிலங்கையில் தொழில் செய்ய முடியாது. காரணம் பருவக் காற்றின் செல்வாக்கு. இதனால் அவர்கள் வடக்கு நோக்கி வருவது வழக்கம். போர் காலத்துக்கு முன்னரும் தெற்கு மீனவர்கள் வடக்குக்கு வந்து வாடி அமைத்து மீன்பிடியில் ஈடுபடுவதுண்டு. இவ்வாறு வருபவர்களால் பல தொல்லைகள், கலாசராப் பிறழ்வுகள் ஏற்பட்டன.
கரையோரத்தில் வேகமாகப் பயணிக்கும் படகுகள்
கரையோரத்தில் வேகமாகப் பயணிக்கும் படகுகள்
‘1977 – 78 களில் இப்பகுதியில் வந்து நின்றவர்களால் வாடி போட்டு நின்ற சிங்களவர்களால் நிறையப் பிரச்சினைகள் ஏற்பட்டன.கோயில் திருவிழாவில் நின்ற எங்களுடைய பெண்களுடன் அவர்கள் சேஷ்டை விட்டனர். இதனால் மோதல் ஏற்பட்டு அது இரண்டுபேரின் மரணத்தில் முடிந்தது. அதுக்குப் பிறகு போரும் தொடங்கிட்டு. அங்கால இருந்து ஆட்கள் வாறேல்ல. இப்போது திரும்பவும் தொடங்கீட்டாங்கள்” என்கிறார் தாளையடியில் உணவகம் நடத்தி வருபவர்.
இப்போது வந்திருப்பவர்களாலும் எமது கலாசாரம் – பண்பாட்டுக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதுமட்டுமின்றி வறுமையில் வாடுபவர்களைக் கண்டறிந்து அவர்களின் காணியை வாங்குவதற்காகப் பெருந்தொகைப் பேரத்தில் முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர் என இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தென்னிலங்கையில் இருந்து வருவர்களுக்கு கடல் அட்டை பிடித்தல் என்பது ஒரு சாட்டு. கடல் அட்டை பிடிப்புக்கான அனுமதியுடன் வருபவர்கள் மீன்பிடி, சங்கு குளித்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்.
ஜோசப் பிரான்சிஸ் - செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்
ஜோசப் பிரான்சிஸ் – செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்
‘கடல் அட்டைக்காக நீருக்குள் செல்பவர்கள் மீன்கள் நிற்கும் இடங்களைக் கூறி சுருக்குவலை மூலம் அவற்றைப் பிடிக்கிறார்கள். போர் நடந்த கடற்பரப்பு என்பதால் பள்ளங்கள் நிறையவுள்ளன. இந்த இருண்ட பகுதிக்குள் பாரை மீன்கள் நிறைந்திருக்கும். அவ்வாறான சமயங்களில் வெடி (டைனமற்) வைத்து மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். வெடியைப் பயன்படுத்துவதால் அப்பகுதியில் மட்டுமே பாரை மீன்கள் இறக்கின்றன. ஆனால் ஒரு கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் சூடை மீன்களும், இரண்டு கிலோமீற்றர் சுற்று வட்டாரத்தில் நெத்தலி மீன்களும் இறக்கின்றன. இவர்களை நாங்களோ அல்லது நீரியல் வளத்திணைக்களத்தினரோ பிடிக்க முயன்றால் மீன்களை கடலில் கொட்டி விடுகின்றனர்” என்கிறார் செம்பியன்பற்று கடற்றொழில் சங்கத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ்.
சங்குகள் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கொண்டுசெல்வதற்காக எடுக்கப்படுகின்றன
சங்குகள் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கொண்டுசெல்வதற்காக எடுக்கப்படுகின்றன
சங்கு எடுத்தல், மீன்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபவடுவதால்  மேலதிகமாகப் பெருந்தொகையை சம்பாதிக்கிறார்கள் தென்னிலங்கை மீனவர்கள். சங்கு எடுத்தல் இலங்கையில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டுள்ள போதும் இவர்களுக்கு நீரியல் வளத் திணைக்களத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறுகிறார் அதன் யாழ். மாவட்டப் பணிப்பாளர் சுதாகரன். சாதாரணமாக நல்ல இனப் பெரிய சங்கு ஒன்று உள்நாட்டு சந்தையில் 7 ஆயிரம் ரூபா தொடக்கம் விற்பனையாகிறது. அதுவே வலம்புரிச் சங்காக இருந்தால் 20 ஆயிரம் ரூபாவில் தொடங்கி சில இலட்சங்களைத் தொடும்.
எதிர்ப்பு ஏன்?
‘எங்கள் கடல் எங்களுக்கே சொந்தம்” என்றுகூறும் இப்பிரதேசத்தவர்கள், தென்னிலங்கை மீனவர்களால் தொழில் ரீதியாகப் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். இவர்கள் 5 கிலோமீற்றருக்கு அப்பாலேயே அட்டை பிடிப்பில் ஈடுபட முடியும். ஆனால் இவர்கள் கரையோரத்திலேயே அதிகளவு நேரம் அட்டை பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் கரையில் படகுகளில் வேகமாக எந்நேரமும் பயணிப்பதாலும் இயந்திர ஒலியாலும் கரைவலை மீனவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். ‘படகுகளில் செல்பவர்கள் தடையில்லாமல் செல்வதற்கு வசதியாக கரைவலைகளை வெட்டிவிடுகின்றனர் என்கிறார் வாடியில் பணியாற்றும் விஜயலட்சுமி என்பவர். முன்பு கரைவலையில் அதிகளவில் மீன்பிடிபடும் எனக் கூறிய அவர் ‘இன்று (கடந்த சனிக்கிழமை) மூன்றரை கிலோ மீனே பிடிப்பட்டது. இந்த வாடியில் 8 பேர் தொழில் செய்கின்றனர். இந்த மூன்றரைக் கிலோ மீன் மூலம் கிடைக்கும் வருமானம் 8 குடும்பங்களுக்கும் போதுமா…?” அவரின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது.
இரவு நேரங்களல் அட்டை பிடிக்கத் தடை என்ற போதிலும் ‘சட்டம் என்பதே மீறுவதற்காகத்தான்” என்பது போல நடக்கிறார்கள். இவர்கள் பெரும் வெளிச்சத்தை உருவாக்கும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி அட்டை சேகரிக்கிறார்கள். 500 மீற்றர் வரை ஒளி பாய்ச்சும் இந்த மின் விளக்குகளால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாரி காலத்தில் மீன் பிடிக்க முடியாது என்பதால் தொழிலை நிறுத்தும் வடக்கு மீனவர்கள் இப்போது தென்னிலங்கை மீனவர்களால் பெரும் தொல்லைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். தொழில் இல்லாத காலத்தில் தென்னிலங்கைக்கு சென்று வாடியமைத்து மீன்பிடிப்பதோ அல்லது அங்கு சென்று மீன்களை விற்பது என்பதோ முடியாத காரியம். வடக்கு மீனவர்கள் இலங்கையின் வேறு எப்பகுதியிலும் மீன் விற்பனையில் ஈடுபட முடியாது என்பது எழுதப்படாத சட்டமாக அங்குள்ள கடற்றொழில் சங்கங்கள் பின்பற்றி வருகின்றன என்கிறார்கள் வடமராட்சி கிழக்கு மீனவர்கள்.
விலைபோகும் மீனவர்கள்
சங்குகள் பிறருக்குத் தெரியாதவாறு வாகனத்தில் மறைத்து வைக்கப்படுகின்றன.
சங்குகள் பிறருக்குத் தெரியாதவாறு வாகனத்தில் மறைத்து வைக்கப்படுகின்றன.
தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு வடமராட்சி கிழக்கு மீனவர்களும் உடந்தையாக இருக்கின்றனர். பணத்தைப் பெற்றுக் கொண்டு தமக்குரிய பாடுகளை தென்னிலங்கை மீனவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறார்கள். ஒரு பாடு 10 தொடக்கம் 12 இலட்சம் ரூபா வரை 5 மாதங்களுக்கு குத்தகை போன்று விடப்படுகின்றது. இவ்வாறு பாடுகளை வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக 4 அல்லது 5 இலட்சம் ரூபா வரை கடற்றொழில் சங்கங்கள், சமாசம், சம்மேளனங்களின் உயர் மட்டங்களுக்கு வழங்கப்படுகின்றது.
இதேபோன்று நீரியல் வளத் திணைக்களம், பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் சில இலட்சங்கள் லஞ்சமாக வழங்கப்படுகின்றன. இந்த லஞ்சத் தொகை பலரும் கூறினாலும் இதில் மிகைப்படுத்தப்பட்ட தொகைகளும் உலவுகின்றன. அது தவிர தமக்குத் தேவையானவரின் வீடுகளில் உயர் அதிகாரிகள், தென்னிலங்கை வாடிகளின் முதலாளிகள், முக்கியஸ்தர்கள் மது விருந்துகளில் பங்கேற்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவுகூட செம்பியன்பற்றைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் இவ்வாறான விருந்து ஒன்று இடம்பெற்றதாக மக்கள் கூறினர்.
பறிபோவது நம் வளமே
‘தென்னிலங்கையரின் அத்துமீறலுக்கு எதிராக மீனவர்கள் போராடினாலும் சங்கங்கள், சமாசம் என்பவை குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. நீரியல் வளத்திணைக்களம் முற்றுகைப் போராட்டத்தைக்கூட சில சங்கங்கள் இழுத்தடித்து குழப்பியடித்தன. இவ்வாறான சம்பவங்கள் தொடர அதிகாரிகளிடம் புரையோடிப் போய்க் கிடக்கும் லஞ்சமும் காரணம் என்கிறார் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர் முரளி.
ஆனாலும், மீனவர்களின் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. பறிபோவது நம் வளம்தான் என்று எப்போது உணரப் போகிறோம்…!
தமிழ்லீடருக்காக தமிழரசன்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila