நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர்.....

நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி
சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தின், காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் உள்ள காலாட்படை பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிகழ்வில் காலாட்படை பணிப்பாளர் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
காலாட்படை பணியக பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முன்னர் 66 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியவர்.
இதன்போது, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களில் இவர் பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்தார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாக துமிந்த கெப்பிட்டிவலன்ன, இருந்த போது, அப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, 24 தமிழ் இளைஞர்களை கைது செய்திருந்தார். அவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இவர்களில் மூவர் தொடர்பாகவே, யாழ். மேல்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் பிரதான எதிரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன குறிப்பிடப்பட்டுள்ளார். அவரது சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம், வழக்காடுவதற்கு யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த நிலையிலும், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன சிறிலங்கா இராணுவத்தின் காலாட் படை பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்
அத்துடன், காலாட்படை பணிப்பாளராக உள்ள, பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவும், மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியவராவார்.
இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் ஒரு பிரிகேட்டுக்குத் தலைமை தாங்கியிருந்த அவர், வெலிவேரியவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர்.
இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் இராணுவ தலைமையகத்தில் காலாட்படை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila