விவசாயிகளின் விளைநிலங்களில் விடுதியை அமைக்கும் இராணுவம் - ஐங்கரநேசன்

சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட எமது விவசாயிகள் தினக் கூலிகளாக வீதிகளில்
அலைந்து கொண்டிருக்க, அவர்களது விளைநிலங்களில் இராணுவம் விளையாட்டு அரங்குகளையும் உல்லாச விடுதியையும் அமைத்திருக்கிறது. இது மஹிந்தவின் மாளிகை என்று ஊடகங்களை அழைத்துச் சென்று உலகுக்குக் காட்டிய நல்லாட்சியின் புதிய ஜனாதிபதியும் அவற்றை விடுவித்து எமது மக்களிடம் கையளிப்பதாக இல்லை. என்றும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் தன்னுடைய அமைச்சின் கீழ் வரும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டினை சமர்பித்து நேற்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது,

எனது அமைச்சின் கீழ் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகிய 5 துறைகள் இயங்கிவருகின்றன. அத்தோடு, அமைச்சின் ஊடாக நீர்வழங்கல், உணவு வழங்கல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புச் சேவைகளையும் வழங்கி வருகிறோம். இவற்றுக்கான 2016 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முன்பாக, இந்த உயரிய சபையின் கவனத்துக்குச் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த இரண்டு வருடங்களிலும் பாதீடு அமர்வுகளில் நான் ஆற்றிய உரைகளை பேரவைச் செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையை (ஹன்சார்ட்) இன்று காலை படித்துப் பார்த்தேன். அப்போது நான் தெரிவித்த பல விடயங்களை வரிக்குவரி மாறாமல், ஆனால், முன்னதைவிட அதிக அழுத்தத்துடன் இப்போதும் பதிவு செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை நீடிக்கிறது என்பதை மன வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வடக்கு மாகாண சபை தோற்றம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதும், போர் முறித்துப்போட்ட வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்தை இன்னமும் எம்மால் நிமிர்த்த முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

1991ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்ட எமது உறவுகளுக்காக திருநெல்வேலி முத்துத்தம்பிமகாவித்தியாலத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றை, எனது கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் அமைப்பான தேனீக்கள் மூலம் நிர்வகித்து வந்தோம். இக்காலப்பகுதியில் இராணுவமுகாம் விரிவுபடுத்தலுக்காகப் பலாலியில் இருந்தும் எமது மக்கள் விரட்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவர்கள் விவசாயிகள். நாம் முகாம் நடாத்துவதை அறிந்த பலாலியைச் சேர்ந்த ஒரு வயோதிபப் பெண் அவ்வப்போது வந்து சில உதவிகளைப் பெற்றுச் செல்வார். ஒரு தடவை அவர் வந்தபோது நான் இருக்கவில்லை தற்செயலாக மண்ணெண்ணைய் சிந்தியதால் பாவனைக்கு உதவாதென நாம் புறமொதுக்கி வைத்திருந்த அரிசிப் பொதியொன்றை அவர் கண்ணுற நேர்ந்து, அதனை எடுத்துச் சென்று விட்டார்.

ஒரு மாதம் கழித்து மீளவும் அவர் வந்தபோது, அந்த அரிசியை மண்ணெண்ணெய் மணம் போகும் வரைக்கும் கழுவிக் காயவைத்துச் சோறாக்கி உண்டதால் முழுக் குடும்பமும் அதிக நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். வலிகாமம் வடக்கின் வளமான மண்ணை விட்டு எமது விவசாயிகள் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் கடந்து விட்டபோதும் கூட, அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அண்மையில், வெள்ள நிவாரணமாக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர்களின் சில முகாம்களுக்குச் சென்றிருந்தோம். அங்கு, முதலில் குறிப்பிட்ட அம்மாவை நான் காணவில்லை. ஆனால், அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஏராளமான அம்மாக்கள் ஒட்டி வாடிய உடலுடன் எமது அரிசிப் பொதிகளுக்காக வரிசையில் நின்றதைப் பார்த்தேன்.

விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் இடையிலான பந்தம் அதிகம், இவர்கள் தமது சொந்த மண்ணைத் தவிர வேறு எந்த மண்ணிலும் ஊன்றிக்கிளைக்கமாட்டார்கள். சொந்த மண்ணுக்கு இவர்கள் திரும்பாதவரைக்கும், இவர்களது வாழ்வும் எமது விவசாயப் பொருளாதாரமும் நொடிந்தே நீடிக்கும். சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட எமது விவசாயிகள் தினக் கூலிகளாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, அவர்களது விளைநிலங்களில் இராணுவம் விளையாட்டு அரங்குகளையும் உல்லாச விடுதியையும் அமைத்திருக்கிறது. இது மகிந்தவின் மாளிகை என்று ஊடகங்களை அழைத்துச் சென்று உலகுக்குக் காட்டிய நல்லாட்சியின் புதிய ஜனாதிபதியும் இவற்றை விடுவித்து எமது மக்களிடம் கையளிப்பதாக இல்லை.

எமது விளைநிலங்களில் இராணுவம் இப்போதும் பயிர்செய்து, சந்தைப்படுத்தி வருகிறது. படையினர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகிறார்கள் என்று பலரும் குரலெழுப்பியதன் விளைவாக, இப்போது படையினர் தமது உற்பத்திகளை முன்னரைபோலத் தாமே சந்தைகளுக்குக் கொண்டுவராமல் உள்ளூர் முகவர்கள் மூலம் கொடுத்தனுப்பி வைக்கிறார்கள். செலவில்லா விவசாயம் என்பதால் படையினர் குறைந்த விலையில் சந்தைப்படுத்தி வருகிறார்கள். இதனால், எமது விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க முடியாமல் தொடர்ந்தும் நட்டத்தையே சந்திக்க வேண்டியுள்ளது. பொதுமக்களின் விளைநிலங்களில் இருந்துமட்டுமல்ல, எமது திணைக்களங்களுக்குச் சொந்தமான பண்ணை நிலங்களில் இருந்தும் இராணுவம் விலகுவதாக இல்லை.

எமது விவசாயத்துறையின் மேம்பாட்டில் பெரும் பங்காற்றிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப்பண்ணை, இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையம், கனகராயன்குள தாய்த்தாவரப் பண்ணை, புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் அலுவலகம், மன்னார் விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் என்று ஏறத்தாழ 425 ஏக்கர் பரப்பளவு இப்போதும் படையினர் வசமே உள்ளது. வட்டக்கச்சிப் பண்ணையையாவது முதலில் தாருங்கள் என்ற எங்களது கோரிக்கையைப் புறம்தள்ளி அங்கு படையினர் தற்போது புதிதாகக் கட்டிடம் ஒன்றை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

விவசாய நிலங்களின் அபகரிப்பு சத்தம் இல்லாது இன்னுமொரு வடிவிலும் ஆரம்பமாகியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில் பற்றைக்காடுகள் வளர்ந்திருப்பதைக் காரணமாக்கி, வனவளத் திணைக்களமும், வனசீவராசிகள் திணைக்களமும், இந்நிலங்களில் எல்லைக்கற்களை நாட்டித் தமதாக்கி வருகின்றன. இது, சூழற்பாதுகாப்பு என்று முகமூடியணிந்து எமது குடியானவர்களை அவர்களது சொந்தநிலங்களில் இருந்து விரட்டும் சூழலியல் ஏகாதிபத்தியமே தவிர, வேறொன்றல்ல.

எமது மண்ணில் என்ன பயிரிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக எமது விவசாயிகளோ அல்லது நாங்களோ இல்லை என்பதையும் ஆற்றாமையுடன் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எமது மண்ணுக்கு ஏற்புடையதா, நீடித்த வருமானம் தரவல்லதா, உணவுப் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்காதா, சூழலில் பாதிப்புகளை ஏற்படுத்தாதா என்பன போன்ற ஆய்வுகள் எதுவுமின்றி சந்தனம், இறப்பர், கரும்பு, மூங்கில் என்று பல தாவரங்கள் பல்வேறு நிறுவனங்களால் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவைபற்றிக் கேட்டால், மாகாணத்துக்கு விளக்கம் எதற்கு மத்தியிடம் அனுமதி பெற்றாகி விட்டது என்கிறார்கள்.

எமது பிரதி விவசாயப் பணிப்பாளர்களுக்குச் சமாந்தரமாக, மாவட்டச் செயலகங்களில் இருந்தவாறு மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள் இப்போது தனியானதொரு நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட்டிருந்த கமநல சேவைகள் திணைக்களம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் மத்திய அரசிடம் கைமாறிய பிறகு, விரல் விட்டு எண்ணக்கூடிய பாரிய குளங்கள் மற்றும் சில நடுத்தரக் குளங்களைத் தவிர சிறிய நீர்ப்பாசனக் குளங்களை நிர்வகிக்கும் உரிமை எங்களிடம் இருந்து இல்லாமல் போய்விட்டது.

விவசாயிகளுக்கு உரங்களை வழங்கும் உரிமைகூட எங்களிடம் இல்லை. இதுதான் கள யதார்த்தம். வடக்கு மாகாணசபை என்ற சவலைப் பிள்ளையை, தமிழ்மக்களுக்குக் கொடுத்த கொழுத்த அரசியல் உரிமையாக உலகுக்குக் காட்டியவாறு மத்திய அரசு, தொடர்ந்தும் எம்மீது மேலாதிக்கம் செலுத்தியே வருகிறது. எமக்கான உரிமைகளை அங்கீகரிக்க மறுத்து எம்மை ஓரங்கட்டி எல்லா விடயங்களிலும் தலையீடு செய்து வருகிறது. வடக்கு மாகாணசபை அரசியல் பேச வேண்டாம் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினாலே போதும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

அரசியல் அதிகாரம் இல்லாமல் எத்தகைய நிலையான அபிவிருத்தியும் சாத்தியமாகாது என்பதால் மாகாண சபைக்கு, அதன் கௌரவ முதல்வருக்குத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளில் தீர்க்கமான முடிவெடுப்பதற்குரிய கடப்பாடு இருக்கிறதென்பதை இங்கு அழுத்தந் திருத்தமாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன். அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாணசபை உரிய காலத்தில், உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு மாகாணசபை மீது தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது.

அபிவிருத்தியை உரியவாறு முன்னெடுப்பதற்கு நிதிமாத்திரம் போதுமானது அல்ல. அதற்கு ஏற்ற ஆளணியும் வேண்டும். விவசாயத் திணைக்களத்தில் அகில இலங்கைச் சேவைத் தரத்தில் ஒரு மேலதிக விவசாயப் பணிப்பாளருக்கும், 14 பிரதி விவசாயப் பணிப்பாளர்களுக்கும் ஆளணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 15 ஆளணி வெற்றிடங்களும் இன்னமும் நிரப்பப்பட முடியாமல் உள்ளது. இப்படி எனது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களில் 555 ஆளணி வெற்றிடங்கள் உள்ளன. ஆனால், எமக்கு உள்ள அரசியல் ரீதியான தடைகளையும், நிர்வாக ரீதியான போதாமைகளையும் தாண்டி எமது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் 2015ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க பல செயல்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.

2015ஆம் ஆண்டில் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய பூரணமானவிபரங்கள் அடங்கிய தொகுப்பு விரைவில் உறுப்பினர்கள் அனைவருக்கும் கையளிக்கப்பட இருப்பதால், இங்கு விபரிப்பதைத் தவிர்த்துக் கொள்கிறேன். எனது அமைச்சுக்கு உட்பட்ட துறைகளினூடாக 2016 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக நிதி ஆணைக்குழுவிடம் நாம் 1172 மில்லியன் ரூபாவைக் கேட்டிருந்தோம். ஆனால், எமது தேவையின் மூன்றில் ஒரு பங்கையே (410 மில்லியன் ரூபாவையே) தந்திருக்கிறார்கள்.

மேலும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக 26.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 436.5 மில்லியன் ரூபாய் மாத்திரமே அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென நிதி ஆணைக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியாகும். அத்தோடு, மீண்டுவரும் செலவினங்களாக 976.95 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் நிதி ஆணைக்குழுவிடம் இருந்து 1413.45 மில்லியன் ரூபாய் நிதி மாத்திரமே எமக்குக் ஒதுக்கீடாகியுள்ளது. எமது அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுவரும் உணவு வழங்கல், நீர்வழங்கல் மற்றம் சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கெனக் கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் தனியாக நிதி எதுவும் நிதி ஆணைக்குழுவால் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தனியார் காற்றுமின் ஆலையுடன் பிரதம செயலாளர் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், வணிக நிறுவனங்களுக்குரிய சமூக கடப்பாடாக 30 மில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்நிதியும் இப்பாதீடில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 2016ஆம் ஆண்டில் நாம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்ற இருக்கும் திட்டங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்,

நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கோடு செய்கைப் பரப்பளவை அதிகரிக்கவும், கூடுதல் அறுவடையைத் தரக்கூடிய நெல்லினங்களையும் உவரைத் தாங்கக்கூடிய நெல் இனங்களையும் அதிகளவில் பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பிஸ்கற்’ போன்ற வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்வதற்கென யுவ 309 என்ற புதிய நெல் இனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உணவுப்பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கோடு சோளச் செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. விவசாய இரசாயனங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு சேதன விவசாயம் ஊக்குவிக்கப்பட உள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடும், இரசாயனங்களின் பிரயோகம் இல்லாத பாதுகாப்பான உணவை வழங்கும் நோக்கோடும் காளான் செய்கை விரிவுபடுத்தப்பட உள்ளது.

மாம்பழ ஏற்றுமதி வர்த்தகத்தைக் கருத்திற்கொண்டு அடர்பயிர்ச்செய்கை என்னும் புதிய முறையில் மாமரப்பண்ணைகள் உருவாக்கப்பட உள்ளன. எகிப்தில் இருந்து புதிய மாமர இனம் தருவிக்கப்பட உள்ளது. வடக்கு கௌரவ ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிகக்கார அவர்களின் முன்முயற்சியால், மத்திய அரசாங்கத்தின் ஊடாக, எமது மாகாண விவசாயப் பணிப்பாளரினது பங்கேற்புடனும் இதற்கான ஒப்பந்தம் அண்மையில் எகிப்தில் கைச்சாத்தாகியுள்ளது. இலங்கையில் தற்போது பிரபல்யமாக உள்ள ‘அப்பிள் கொய்யா’ கௌரவ ஆளுநர் அவர்களின் முயற்சியினாலேயே தாய்லாந்தில் இருந்து எடுத்து வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகைப் பூச்செடியின் மருத்துவப் பெறுமதி வாய்ந்த விதைகளின் ஏற்றுமதி வாய்ப்பைக் கருத்திற்கொண்டு சோதனை ரீதியாக கார்த்திகை பூச்செடிப்பண்ணை உருவாக்கப்பட உள்ளது. எமது நீர்ப்பாசனத் திணைக்களம் இரணைமடுக்குளம், முத்தையன்கட்டுக்குளம், ஆகியவற்றின் புனரமைப்பிலும் தொண்டைமானாறு உவர்நீர்த்தடுப் பணையைப் புனரமைப்பதிலுமே கூடுதல் கவனம் செலுத்த உள்ளது. இத்திட்டங்கள் மிகப் பெரிய பாரிய திட்டங்கள் என்பதாலும் குளப்புனரமைப்புக் காலங்களில் விவசாயிகள் பயிர் செய்ய முடியாது என்பதால் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்றவேண்டி இருப்பதாலும் நீர்ப்பாசனத் திணைக்களம் இம்மூன்று திட்டங்களின் மீதுமே அதிகூடிய கவனத்தைச் செலுத்த உள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்கவும், வவுனியாவில் இயங்காது இருக்கும் நவீன பால் பதனிடும் நிலையத்தை இயங்கவைப்பதற்கும், கூட்டுறவு அமைப்புகளினதும் தனியார் முதலீட்டினதும் இணைந்த பங்களிப்பாக வடக்குக்கான பால் விநியோக வலையமைப்பு ஒன்றை ஒரு பொதுவான பெயரில் உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக வடக்குப் பொருளாதாரத்தின் தாங்கு தூண்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டியது பனை உற்பத்திகள்சார் தொழிலே. ஆனால், பல்வேறு காரணங்களினால் பனம்தொழில்சார் முயற்சிகள் முடங்கிப்போயுள்ளன. நலிவடைந்திருக்கும் பனைசார் தொழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாகப் பதநீர் உற்பத்தியும் விற்பனையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தொழில் முயற்சிகளின்போது பனையில் இருந்து தவறி வீழ்ந்து மரணமானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபா உதவி தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டில் இருந்து இத்திட்டம் கருத்தில் எடுக்கப்படும். அபிவிருத்திக்கான திட்டமிடலில், அது நிலையான அபிவிருத்தியாக அமைய வேண்டுமெனில் கொள்கைகள் சார்ந்து முடிவெடுப்பதும் அவசியமாகிறது. எமது வடக்கு மாகாணம் தென் இலங்கையில் இருந்து மாறுபட்ட இயற்கைச் சூழலைக் கொண்டது. நீண்ட காலம் யுத்தத்துக்கு முகங்கொடுத்து வந்த எமது மக்களின் தேவைகளும் தென் இலங்கை மக்களின் தேவைகளில் இருந்து மாறுபட்டவையாக உள்ளன. அந்தவகையில், எமது இயற்கைச் சூழல் சார்ந்தும், அதையொட்டி நாம் மேற்கொள்ளும் விவசாயம் மற்றும் நீர்ப்பயன்பாடு சார்ந்தும் கொள்கைகளை வகுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் மே மாதத்தில் எமது பல்கலைக்கழக ஆய்வாளர்களையும் சர்வதேச ஆய்வாளர்களையும் கூட்டி ஒரு ஆய்வு மாநாடொன்றை நடாத்தி எமது பிரதேசத்துக்கான கொள்கை வரைபு முன்னெடுக்கப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இங்கு நான் குறிப்பிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எமது திணைக்களங்களின் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான அபிவிருத்தித் திட்டமிடலை, வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தவல்ல நிலைத்து நிற்கும் அபிவிருத்தித் திட்டங்களாக விரைவிலேயே மேற்கொள்வார்கள். அவ்வப்போது எமது உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளும் உள்வாங்கப்படும் என்றுள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila