மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று மீண்டும் மீண்டும் மாவையர் (சும்மா) கூறுவாரானால், இவரை ஓர் அரசியல் மனநோயாளியாக மக்கள் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
காணாமற்போனோர் தொடர்பாக மக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த சில நாட்களாக இலங்கையின் வடக்கே பொதுமக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்தது.
இறுதிக்கட்ட யுத்தகாலத்தில் காணமற்போகச் செய்யப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் – முக்கியமாக பெற்றோர், சகோதரர்கள், மனைவிமார், பிள்ளைகள் இங்கு வெளிப்படுத்திய தகவல்கள் சிங்கள அரசும் அதன் இராணுவமும் எவ்வாறு தமிழ் மக்களை இனஅழிப்புச் செய்தன என்பதை போதியளவுக்கு வெளிப்படுத்தியது.
அதேசமயம், காணாமற்போகச் செய்யப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழை வழங்கி, ந~;ட ஈட்டைக் கொடுத்து விடயத்தை மூடிவிட பரணகம ஆணைக்குழு எடுத்த முயற்சிகளையும் இதனூடாக அறிய முடிந்தது.
தமது உறவுகளைத் தொலைத்து நிற்பவர்கள் அவர்களை மீட்டுத் தருமாறு அல்லது இருப்பிடத்தைக் காட்டித்தருமாறு ஆணைக்குழுவிடம் கேட்டு நிற்கிறார்களே தவிர, அதற்குப் பதிலாக வேறு எதனையும் வேண்டவில்லை என்பதை பரணகம குழு உளரீதியாக உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
“இறுதி யுத்தத்தில் சரணடைந்து பின்னர் காணாமற்போன அனைவருக்கும் படையினரே பொறுப்பு” என்று பரணகம கூறியதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
தம்மை நீதியானவர், நேர்மையானவர், நடுநிலைத் துணிச்சலானவர் என்று காட்ட இப்படியொரு நாடகத்தை பரணகம ஆடுவது நன்றாகத் தெரிகிறது. தாம் கூறுவதை எந்தச் சிங்கள அரசும் ஏற்று ஒருபோதும் பொறுப்புக்கூற மாட்டாது என்பது அவருக்குத் தெரியாததல்ல.
நல்லாட்சி, நல்லிணக்கம் என்பவற்றுக்கப்பால் பொறுப்புக் கூறல் என்பதை அன்று மகிந்தவிலிருந்து இன்று மைத்திரி – ரணில் கூட்டாட்சிவரை எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஜெனிவாவரை தெரிந்த விடயம்.
யாழ்ப்பாணப் பத்திரிகைகள் விசாரணைக் குழுவின் முன்னால் மக்கள் வழங்கும் சாட்சியங்களை வரிவரியாக ஒளிப்படத்துடன் சேர்த்து பக்கம் பக்கமாக செய்தி வெளியிடுகின்றன.
மனித உரிமை ஆணையாளர் நிராகரித்த பரணகம குழு விசாரணை இறுதியில் பரணில் ஏற்றப்படும் என்பதுதான் உண்மை.
இந்த விசாரணைச் செய்திகளுக்கு நிகராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களின் அரசியல் அறிக்கைகளும் குறைவின்றி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
நல்லாட்சியுடனான தேனிலவு முடிந்துவிடும் நிலை தோன்றியிருப்பதுபோல கூட்டமைப்பின் சில பிரமுகர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வருகின்றனர்.
ஆனால் இவர்களின் தலைவரான சம்பந்தன் 2016ம் ஆண்டில் தமிழருக்கு அரசியல் தீர்வொன்று கிடைக்குமென்று செல்லுமிடமெங்கும் கிளிச்சோதிடம் சொல்லி வருகிறார்.
இன்றைய அரசு மீது சர்வதேசம் கொண்டிருக்கும் நம்பிக்கையை அதிகரிப்பதனூடாக தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்குமென நம்பலாமென தமது சோதிடத்தை மேலும் வலுவூட்டுகிறார்.
இப்படியாக அரசின் மீதான நம்பிக்கையை இவர் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் வட – கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் நியமனங்களை பிரதமர் ரணில் அறிவித்தார்.
கூட்டமைப்பினர் எதிர்பார்த்திருந்த இந்தப் பதவிகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு முறையே பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர் றிசாட் பதியுதின், பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இதுபோதாதென்று, யாழ்ப்பாணத்தில் தேர்தலில் தோல்வியடைந்து பின்னர் நியமனப் பட்டியலில் உறுப்பினரான சுதந்திரக் கட்சியின் அங்கஜன் யாழ். மாவட்ட இணைத் தலைவராக நியமிக்கப்பட்டு கூட்டமைப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டது.
மாவை சேனாதிராஜா உட்பட இப்பதவிகளை எதிர்பார்த்திருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும் ஏமாற்றமடைந்து தங்கள் இதயக் குமுறலை பகிரங்கப்படுத்தினர்.
இவ்வேளையில் திருவாளர் சம்பந்தன் அற்புதமான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
“மாவட்ட அபிவிருத்திக் குழு போன்ற சலுகைகளை அரசிடமிருந்து பெறுவது அரசியல் தீர்வு என்ற எமது இலக்கைப் பலவீனப்படுத்திவிடும்” என்பதே இந்த முதியவரின் எட்டாத பழம் புளிக்கும் கதை.
(அப்படியானால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற சலுகை என்னவாம்? ஏன்று உள்வீட்டில் சிலர் முணுமுணுத்தனராயினும், பகிரங்கமாகக் கேட்க அவர்களுக்கு அந்த எலும்பு இருக்கவில்லை)
சம்பந்தன் இப்படியாக ஒரு கருத்தைச் சொல்லிய அடுத்தடுத்த நாட்களில், சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
எல்லோரும் மகிழ்ச்சியுடன் லபக்கென இப்பதவியைப் பிடித்துக் கொண்டனர்.
“இந்தப் பதவிகள் எமது அரசியல் தீர்வு இலக்கைப் பலவீனப்படுத்துமாதலால், உடனடியாக அதனை ராஜினாமாச் செய்யுங்கள்” என்று சம்பந்தன் இதுவரை அறிவிக்கவில்லை.
அப்படியாக அவர் அறிவித்தாலும் பதவிகள் பெற்ற எவரும் அதனைத் துறக்க மாட்டார்கள் என்பது சம்பந்தனுக்குத் தெரியாததல்ல.
கிடைக்காதவரை சீச்சீ… இது புளிப்பழம்; கிடைத்தால் அச்சா… இது இனிப்புப் பழம் கதைதான் இது.
ஒரு விடயத்தை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும். கூட்டமைப்பினருக்கு அவர்கள் அதிக ஆசனங்களைப் பெற்ற மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்கள் பதவிகள்தான் வழங்கப்பட்டதே தவிர, தலைவர் பதவி வழங்கப்படவில்லை.
“பரவாயில்லை! இணைத்தலைவருக்கான உதவித் தலைவராக நியமித்தாலும் நாம் ஏற்றுக் கொள்வோம்” என்று தங்கள் விசுவாசத்தை நல்லெண்ணமாகக் காட்ட விரும்பும் கூட்டமைப்பினரின் போக்கை, இவர்களது இன்றைய இயலாமையின் வெளிப்பாடு என்றே பார்க்க வேண்டியுள்ளது.
இதற்கிடையில் அடிக்கடி சில அரசியல் குண்டுகளையும் இவர்கள் வீசி வருவது வேடிக்கையானது.
அளித்த வாக்குறுதிக்கேற்ப அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தவறினால் மூன்றாம் வாசிப்பில் ரெலோ பங்குபற்ற மாட்டாது என்று அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிவித்தார்.
ஆனால் தமக்கு இந்த அரசாங்கம் வழங்கிய நாடாளுமன்ற குழுக்களின் உபதலைவர் பதவியைத் துறப்பேன் என்று மறந்தும் இவர் கூறவில்லை.
இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒருவகையான எதிர்ப்பைக் காட்டியது. கூட்டமைப்பின் கடைசித் தூணான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன் அவ்வப்போது கடுமையான கருத்துகளைக் கூறி வந்தாலும் முடிவெடுப்பதில் சபலமாகவே இருந்து வருகிறார்.
சம்பந்தனின் அடுத்த வாரிசெனக் கூறப்படும் சுமந்திரன், அரசின் மீதான நம்பிக்கையை கூட்டமைப்பு இழந்து வருகின்றதென்று ஒரு சரவெடியை வீசி, தான் சிங்கள அரசாங்கத்தின் சுவீகாரப்பிள்ளை இல்லையென்பதைக் காட்ட முயற்சித்துள்ளார்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவின் எச்சரிக்கை அமைந்துள்ளது.
“தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்காவிடின் மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பை எவருமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஏனெனில் “மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்று அடிக்கடி கூறிவருவது இவரின் வாய்ப்பாடு.
கடந்த ஒரு வருடத்துக்குள் குறைந்தது பத்துத் தடவைக்குமேல் “மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்று வாயால் வெடி வைத்தாரே தவிர அதுபற்றி ஒருபோதும் விளக்கியதில்லை. அந்தநாளிலிருந்து (நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்) இந்தநாள் வரை இது இவருக்கு மிகவும் கைவந்த கலை. உண்மையான போராட்டம் என்றால் என்னவென்று முப்பதாண்டு காலம் அதனோடு வாழ்ந்து, அதனோடு ஒன்றிப் பங்கெடுத்த மக்களுக்கு மாவையின் வாய்ச்சவடால் நன்கு புரியும்.
மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று மீண்டும் மீண்டும் மாவையர் (சும்மா) கூறுவாரானால், இவரை ஓர் அரசியல் மனநோயாளியாக மக்கள் பார்ப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.