மனோகணேசனிற்கு தரகர் வேலை வேண்டாம்?

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசு உருவாக்கியுள்ள அலுவலகம் சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கையே.இலங்கை அரசு தனது முகவர்கள் சகிதம் அலுவலகத்தை திறந்து மக்களை ஏமாற்றுகின்றதென முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.இந்த அரசு மாவட்டம் மாவட்டமாக சந்திப்புக்களை நடத்தியும் அலுவலகங்களை திறந்தாலும் சர்வதேச பங்கெடுப்புடனான நீதி விசாரணையே தீர்வைப்பெற்றுத்தருமென சுட்டிக்காட்டியுள்ளன. 
இதனிடையே இலங்கை அமைச்சர்களுள் ஒருவரான மனோகணேசன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கு நட்டஈடு வழங்க வழங்கியுள்ள ஆலோசனையினை அவை நிராகரித்துள்ளன.எங்கள் சார்பில் தரகர் வேலை பார்க்க மனோகணேசனிற்கு யார் அங்கீகாரம் வழங்கியதெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மனோ கணேசன் தனது கருத்தில் யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னமும் இந்த காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை, மீண்டும், மீண்டும் நடத்தி, ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இம்மக்களை, அழவிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம்,கைம்பெண்களுக்கும், நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நட்டஈட்டு தொகைகள் வழங்கப்பட வேண்டும். எந்த ஒரு நட்ட ஈட்டு தொகையும், காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. இது எவரையும் விட எனக்கு நன்கு தெரியும். ஆனால், இந்த கணிசமான நட்ட ஈட்டு கொடுப்பனவுகள், இந்த நிர்க்கதியான மக்களின் வாழ்நிலைமைகளை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும். இந்த நட்டஈட்டு வழங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் உதவ தயாராக இருப்பதும் எனக்கு தெரியும். ஆகவே இனியும் தாமதிக்க வேண்டாம். இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்து, இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும்.

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை வெளிப்படையாக தொடர வேண்டும். அது கட்டாயம் தேவை. ஆனால், இந்த விசாரணை, கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், கைம்பெண்களுக்கும்,நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நட்டஈட்டு தொகைகளை வழங்கப்பட வேண்டும்.

தம் கணவர்மார்களை இழந்த சகோதரிகள், அவர்களது பிள்ளைகளுடன் இன்று பெருந்தொகை குடும்பங்களை தலைமை தாங்குகிறார்கள். இந்நாட்டில் வடகிழக்கில் இத்தகைய கைம்பெண்கள் சுமார் 70,000 பேருக்கு மேல் இருப்பது வரலாற்று கொடுமை. தங்கள் கணவர்மர்களை இழந்த இவர்கள், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, எந்த அளவு சவால் மிக்க வாழ்நிலைமைகளை சந்திக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகளை இழந்த வயதான பெற்றோர் இன்று பெரும் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கு உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம். எவ்வளவு நட்ட ஈடு வழங்கப்பட்டாலும், அது காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. அது அடிப்படை உண்மை. ஆனால், அது இந்த நிர்க்கதியாகிவிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila