
உடுவில் மகளிர் கல்லூரியில் மாணவிகளால் நடத்தப்பட்ட ஒரு வாரகால அகிம்சை வழியிலான போராட்டத்தில் மாணவிகளைத் தாக்கியோர்பற்றி சுயாதீனவிசாரணை செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்றிரவு பெற்றோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்:
அகிம்சை வழியிலான போராட்டத்தில் பங்கெடுத்த மாணவிகளை நிர்வாகம் பழிவாங்கக்கூடாது. ஏற்கனவே பழிவாங்கும் செயற்பாடுகள் தொடங்கித் தொடர்வதால் அவை நிறுத்தப்படவேண்டுமெனவும் கோரியுள்ளது.
அத்துடன் உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த பல வருடங்களாகப் பல சீர்கேடுகள் இருந்து வந்திருக்கின்றன. பாடசாலை ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களிலே சிலர், விடுதிப் பணியாளர்களிலே சிலர் பிறழ்வான நடத்தைகளிலே ஈடுப்பட்டிருந்தார்கள்.
ஆண் ஆசிரியர்கள் பெண் மாணவிகளுக்குச் சில தகாத முறைகளிலே தண்டனை வழங்க முற்பட்டிருக்கிறார்கள். இதனால் மாணவிகளின் உள நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அதிபர் ஷிராணி மில்ஸின் கவனத்துக்குப் பாடசாலை மாணவர்களினாலும் பெற்றோரினாலும் கொண்டு செல்லப்பட்ட போது அதிபர் இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனைக் கல்லூரியின் புதிய அதிபராகிய திருமதி சுணீத்தா ஜெபரட்ணமும் (முன்னைய உப அதிபர்), புதிய உப அதிபராகிய திருமதி ஜீவானந்தினி அமலதாசும் பல வழிகளிலே தடுத்து நிறுத்த முயற்சித்தனர் என்பதனை மாணவர்களும் பெற்றோரும் நன்கு அறிந்திருந்தனர்.
திருச்சபையினர் இதனைக் கண்டும் காணாமல் இருந்து தவறு செய்பவர்களுக்குத் துணைபோயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நியாயத்தினைக் கண்டுகொள்ளத் தவறிய இரண்டு பேரினது நிருவாகத்தின் கீழே கல்வி கற்பதற்கு மாணவிகள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அச்சத்திலே உள்ள நியாயத்தன்மையினைப் பெற்றோராகிய நாம் புரிந்துகொண்டுள்ளோம். தமது பிரச்சினைகளைத் தாம் சென்று சொல்லக்கூடிய ஒருவராகவும், தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து தமக்குப் பாதுகாப்பினை வழங்கக் கூடிய பாடசாலைக்குள் இருக்கும் ஒரே தலைவராக அவர்கள் ஷிராணி மில்ஸினை நோக்கினார்கள்.
எமது பிள்ளைகள் திருமதி ஷிராணி மில்ஸ் அதிபராகத் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பிப் போராட்டத்திலே ஈடுப்பட்டமைக்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.