தமிழக்களாகிய நாம் எதை வேண்டாம் என்கிறோமோ அதையே தமிழர்கள் தலையில் திணிக்கும் முயற்சியிலேயே தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது. சிங்கள ஆட்சியாளர்கள் தரத்துடிக்கும் ஒற்றையாட்சித் தீர்வுக்கு கை உயர்த்திநிற்கும் தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக 13 ஆவது திருத்தத்திற்குட்பட்ட மாகாணசபைகள் முறையை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதோடு மாகாண சபைகள் அதிகாரத்தில் சர்வதிகாரியான ஆளுநருக்கு கூஜா தூக்கும் கைங்கரியத்திலும் ஈடுபட்டுவருகின்றது.
சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின்படி மாகாண சபைகள் முறைமை உருவாக்கப்பட்டது. அதில் மாகாணசபைக்கோ மாகாண முதலமைச்சருக்கோ அதிகாரங்கள் இல்லை. அதிகாங்கள் அனைத்தும் மத்திய அரசின் நேரடிப் பிரதிநிதியான ஆளுநருக்கே வழங்கப்பட்டுள்ளது என தமிழர் தரப்புக்கள் தங்களுக்காக சுயர்நிர்ணயத்துடன் கூடிய அதிகாரங்கள் மிக்க தீர்விற்காக போராடிக்கொண்டிருக்கிறனர்.

ஆனால் தமிழரசுக் கட்சியோ வடக்கு மாகாணத்தில் முதலாவது முதலமைச்சரை பதவி நீக்க சிறிலங்கா அரசின் பிரதிநிதியான ஆளுநரின் காலில் விழுந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லைத் தீர்மானத்தைக் கையளித்தது. எனினும் அம் முயற்சி மக்கள் போராட்டங்களால் பிசுபிசுத்துப்போக தற்போது ஊழல்குற்றச்சாட்டில் பதவி நீக்கப்பட்ட அமைச்சர் ஒருவரை பதவி நீக்குவதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என நீதிமற்றத்தை நாடி தாங்கள் 13 ஆவது திருத்தத்தின் அடிமைகள் என்பதை தங்கள் எஜமானர்களான சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிரூபித்துக்காட்டியிருக்கிறது.
இச் சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் கூடா ஆகத நிலையில் வடக்கில் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கூறி அதே வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றுக்கு திகதியிட்டிருக்கிறது.
இந்தக் கலந்துரையாடலை எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவே தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் முப்படை உயரதிகாரிகள் கலந்தகொள்ளவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.