சி.வி.விக்னேஸ்வரன் நாளை சொல்லப்போவது என்ன? எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் சமூகம்

வட மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெற்றுள்ள நிலையில் நாளை 24ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன் மக்கள் சந்திப்பு ஒன்று கூடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழ் மக்கள் பேரவை அண்மையில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
“தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் தமிழ் மக்களின் தற்போதைய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது.
இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் விசேட உரையாற்றவுள்ளதோடு தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக்கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள், தொழில் சங்கங்கள் கல்விச் சமுகத்தினர் மற்றும் இளைஞர்- யுவதிகள், போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்புவிடுப்பதாக” அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, வடக்கு அரசியல் பரபரப்பு அடைந்துள்ளது. அண்மை காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியிருந்தது.
இவர்களுக்கு இடையிலான மோதலை அண்மை கால சம்பவங்கள் வெளிப்படையாகவே காட்டியிருந்தன. கூட்டமைப்பின் தலைவர்கள் விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
அதேபோல் விக்னேஸ்வரனும் கூட்டமைப்பின் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் நாளை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் நாளை என்ன சொல்லப்போகின்றார் என்பதை அறிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் எதிர்பார்ப்பில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila