ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு அமைய இணங்கியபடி பொறுப்புக் கூறல் மற்றும் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை நிறைவேற்ற இலங்கை தொடர்ந்தும் தவறினால், 2019 மார்ச்சில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக பரிந்துரைப்பது தொடர்பான மகஜர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேற்படி யோசனைகளை செயற்படுத்த இலங்கை தவறியுள்ளதுடன் அதன் விளைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான கடமைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ரத் அல் ஹூசைன் தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக கடந்த (2018) மார்ச் மாதம் வெளியிட்டார்.
சர்வதேச நீதிமன்ற பொறிமுறை தொடர்பான இலங்கையின் விருப்பத்திற்கு அமைவான விடயத்தில் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், உறுப்பு நாடுகளின் சர்வதேச வரம்பை பயன்படுத்தி பொறுப்புணர்வை வளர்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் பிரதித் தலைவர் கேட் கில்மோர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பொறுப்புக் கூறல் மற்றும் சர்வதேச நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்த தவறினால், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது தொடர்பிலான இணைவழி மகஜர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கையெழுத்திடுவதற்கான வசதியும் காணப்படுகிறது. 10 ஆயிரம் பேர் இந்த மகஜரில் கையெழுத்திட்டால், பிரித்தானிய அரசாங்கம் அதற்கு பதிலளிக்கும்.
ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டால், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த மகஜர் தொடர்பில் விவாதம் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி வரை மகஜரில் கையெழுத்திட முடியும்.
Add Comments