வள்ளுவர் சிலையில் இருந்த ஈழம் என்ற சொல் அழிப்பு


கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்யப்பட்டது. 

திருவள்ளுவர் உலகத்தின் மீது இருப்பது போன்று இந்த சிலையை வடிவமைக்க கிளிநொச்சி தமிழ் சங்கம் தீர்மானித்தமைக்கு அமைய இது நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 

இதன்படி உலக நாடுகள், கண்டங்கள், சமுத்திரங்களின் பெயர்களும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. 

மேலும், இதில் ஈழம் என எழுதப்பட்டு அடைப்புக் குறிக்குள் இலங்கை என எழதப்பட்டிருந்தது. 

இதுவே பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு சர்ச்சையாக காணப்பட்டது. 

அதனால் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சிலையை அமைப்பதற்கு சபையின் வளாகத்தில் அனுமதி வழங்கிய கரைச்சி பிரதேச சபையின் செயலாரை சென்று விசாரித்துள்ளதோடு, ஈழம் எனும் சொல் இன முரண்பாட்டையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் சொல் எனவும் தனிநாட்டை பிரதிபலிக்கிறது என்றும் எனவே அந்தச் சொல்லை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்ததோடு, அதனை அழித்துவிடுமாறும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதனையடுத்து, பிரதேச சபை செயலாளர், கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் இறைபிள்ளையை தொடர்பு கொண்டு ஈழம் எனும் சொல்லை அழித்து விடுமாறு தெரிவித்துள்ளார். 

இதன்படி இன்று காலை ஏழு மணியளவில் உலக வடிவில் அமைக்கப்பட்ட சிலை தாங்கியில் எழுதப்பட்டிருந்த ஈழம் என்ற சொல் அழிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் செயற்பாடு மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாடவிதானங்களில் கூட இலங்கையின் மறுபெயர்களில் ஒன்றாக ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், காரைநகர் சிவன் கோவிலை ஈழத்துச் சிதம்பரம் என்றே அழைக்கின்றனர். 

தேவாரங்கள், காப்பியங்கள் முதல் பல்வேறு சமய மற்றும் இலக்கியங்களில் ஈழம் என்ற சொல் தொன்று தொட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனைத் தவிர தற்போது வடக்கில் ஈழம், தமிழீழம் எனும் சொற்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற பல அரசியல் கட்சிகள் சட்ட ரீதியாக இயங்கி வருகிறது. 

இந்தநிலையில், திருவள்ளுவர் சிலையில் உள்ள பீடத்தில் இலங்கைக்கு எழுதப்பட்ட ஈழத்தை அழிக்க அறிவித்த பயங்கரவாத பிரிவினரையும் அதனை கேட்டு உடனடியாக அழித்த தமிழ்ச் சங்கத்தின் மீது மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila