முன்னணி மீது தாக்குதல்: அடக்கி வாசிக்க சொன்ன டக்ளஸ்!

வலி. மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், தாக்கப்பட்ட முன்னணியின் உறுப்பினருடன் சென்ற அவரது நண்பனான வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் ஒருவரையும் ஈபிடிபி உறுப்பினரின் புதல்வர்கள் மற்றும் அவர்களுடன் நின்ற கும்பல் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவத்தை பொலிஸ் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அழுத்தம் வழங்கியதாக, பொலிசாரே பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் குறிப்பிட்டுள்ளனர். அதனால், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொலிசார் இதுவரை வழக்கு தொடரவில்லை.

கார்த்திகை விளக்கீடு நாளான கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் துணவிச் சந்தியில் இந்த அராஜகம் இடம்பெற்றது.

வலி. மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் மற்றும் அவரது நண்பரான வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்துள்ள தேவகுமார் கபிலன் ஆகியோரே தாக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தின்போது, சங்கரத்தைக் குளத்துக்கு அண்மையாக உள்ள கபிலனின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அதன்போது சங்கரத்தைக் குளத்துக்கு அண்மையாக சுமார் 40 பேர் கொண்ட கும்பல் வாள், கத்தி, பொல்லு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நின்றுள்ளது. அந்தக் கும்பலுக்கு வலி.மேற்கு பிரதேசசபையின் ஈபிடிபியின் உறுப்பினர் நடேசன் என்பவர் தலைமை தாங்கி நின்றுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற வலி. மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை வழிமறித்த அந்தக் கும்பல், கடுமையாகத் தாக்கியுள்ளது. அத்துடன், அவரது நண்பரை கடுமையாகத் தாக்கி வாளால் வெட்டியுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான தேவகுமார் கபிலன், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு தினங்கள் சிகிச்சைக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமையே வீடு திரும்பினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் வட்டுக்கோட்டைப் பொலிஸார், சம்பவத்தை சமூக மட்ட மோதலாக மாற்றுவதற்கு முயற்சித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“சம்பவத்தை பொலிஸ் நிலையத்துடனேயே முடிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா ஐயா அறிவுறுத்தியுள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களாக பல தடவைகள் தொலைபேசி அழைப்பு எடுத்துவிட்டார். சமூகப் பிரச்சினைக்கு காரணமானவர்களைத் தான் கைது செய்யவேண்டும்” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்துள்ளார்.


இதனை சமூக மோதலாக மாற்ற பொலிஸார் முயற்சிப்பதாகவும், இது அடாவடியில் ஈடுபடுவர்களை மேலும் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும்,  வட்டுக்கோட்டையில் சமூக மோதல் ஒன்றுக்கு அது வழிவகுக்கும் என்றும் மக்கள் அச்சம் வெளியிட்டனர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila