தமது பூர்வீக வாழ்விடங்களில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் அவர்களை வெளியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி குறித்த கடிதத்தினை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கேப்பாபுலவைச் சேர்ந்த பூர்வீக மக்களாகிய நாம் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ்நிலங்களை இராணுவத்தினர் அபகரித்திருப்பதால் அவற்றினை விடுவிக்கக்கோரி 670 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
நாம் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது எமது சொத்துக்களை இழந்து நிர்க்கதியான நிலையில் எமது சொந்த ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருந்தோம்.
பின்னர் கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தில் நாங்கள் மீள்குடியேற்றப்பட்டோம். அரசினால் ஜனநாயக வழியில் மீள் குடியமர்த்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் எமது கிராம சேவையாளர் பிரிவுக்குள்ளேயே 10 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.
எம் பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும் என பல வடிவங்களில் உரிமைக் குரல் கொடுத்தோம். அரசு பாராமுகமாக இருக்க எமது வாழ்விடத்தை நாமே பெற்றெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
ஜனாதிபதி கேப்பாபுலவு மக்களின் காணிகள் தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிவித்ததாக நாங்கள் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம்.
ஆனால் ஜனாதிபதியின் காணிகள் விடுவிப்பு பட்டியலில் எமது பூர்வீக வாழ்விடங்கள் அமையவில்லை என அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அடுத்துவரும் நாட்களில் எமது பூர்வீக நிலங்களில் எமது சொந்த விருப்பத்துடன் மீள்குடியேறவுள்ளோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு ஜனாதிபதியும் எமது அரசியல் தலைவர்களுமே பொறுப்புக் கூறவேண்டும்” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.