தீர்வுத் திட்டத்தை பிக்குகள் தயாரித்தால் என்ன?

விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்பு இராமர் சீதைக்கு என்ன முறை என்பதாக அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் கதை முடிந்து போகிறது.புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாகும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறிவருகிறார்.

ஆனால் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் அமுலாவதற்கான அறிகுறிகள் எவையும் தென்படவில்லை.
மாறாக, அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை கடுமையாக எதிர்ப்பதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் அவர் தரப்பும் கங்கணம் கட்டி நிற்கின்றன.

பரவாயில்லை அவர்கள் எதிர்க்கவே செய்வர் என்றால், அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கியே தீருவோம் என உறுதியாக நிற்க வேண்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உறுதி நிலையைக் கைவிட்டு தளர்வு நிலைக்கு வந்துள்ளார் என்பதை அவரின் கருத்துக்கள் உறுதி செய்கின்றன.
இதை நாம் கூறினால், அரசியலமைப்புக்கு எதிரானவர்கள் என்ற விமர்சனங்களும் எழலாம்.

தமிழ் மக்களுக்கு ஓரளவேனும் உரிமை தரக் கூடியதான அரசியலமைப்புச் சீர்திருத்தம் வருகிறது என்றால்,  பரவாயில்லை அது வரட்டும். நாங்கள் எங்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

ஆனால் அரசியலமைப்புச் சீர்திருத்தம் வருமா? என்று கேட்டால், வரும் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தி, தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நாடகம் நடப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் பெளத்த மகா நாயக்கர்களின் அனுமதியுடனேயே வெளி வரும். அவர்கள் எதிர்த்தால், அரசியலமைப்புச் சீர்திருத்தம் வராது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது இந்த நாட்டின் அரசாட்சியும் அதிகாரமும் யார் கையில் இருக்கிறது என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதற்குப் போதுமானதாகும்.

ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், சட்டவாக்கம், நீதிபரிபாலனம் என மக்களாட்சியின் கூறுகள் இயங்குகின்ற போதிலும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அமுலாக்கு வதா? இல்லையா? என்பதை பெளத்த மகா நாயக்கர்களும் பெளத்த பிக்குகளுமே தீர்மானிப்பதாக இருந்தால்,
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை தயாரித்ததிலும் அதுபற்றிய செயலமர்வுகளை நடத்தியதிலும் சட்டவிற்பன்னர்கள் கூடியிருந்து ஆலோ சனை நடத்தி திருத்தங்கள் செய்ததிலும் ஏதே னும் அர்த்தம் இருக்குமா என்ன?

யார் கூடி எதைத் தயாரித்தாலும் அதற்குப் பச்சைக் கொடி காட்டுவது பெளத்த பீடங்கள் என்றால், அரசியலமைப்பைத் தயாரிப்பதையும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் என்ன என்பதைத் தீர்மானிப்பதையும் பெளத்த பிக்குகள் செய்வதே பொருத்து டையதாகும்.

தேவையில்லாமல், மக்கள் பிரதிநிதிகள் கூடியிருந்து மிளகாய்த் தூளில் சம்பல் அரைத்து சபாநாயகருக்கு அபிஷேகம் செய்வதை விடுத்து; நாட்டை பெளத்த பிக்குகளிடம் கையளித்து, நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிடுவதுதான் உத்தமமாகும்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila