நாட்டில் சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தி இலங்கையைச் சுற்றி பயணம் செய்யும் மாற்றுத்திறனாளியின் பயணம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
அதன்படி அவரின் மூன்றாம் நாள் பயணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் புத்தளம் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
மாற்றுத் திறனாளியான வவுனியாவைச் சேர்ந்த மொஹமட் அலி, தமிழ் மாற்றுத் திறனாளி அமைப்பின் ஒழுங்கமைப்பில் நேற்று முன்தினம் காலை யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து மூன்று சக்கர வண்டியில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, அநுராதபுரம் ஊடாக நேற்று புத்தளத்தை சென்றடைந்த அவர், இன்று கொழும்பு நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்து காலி, மாத்தறை அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, புல்மோட்டை, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மீண்டும் யாழ்ப்பாணத்தை சென்றடைவதே இந்த பயணத்தின் நோக்கமாகும் என மொஹமட் அலி தெரிவித்துள்ளார்.