1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிறந்தது. அந்நேரம் இந்திய அமைதிப்படையினர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து கொண்டனர்.
பிறந்த குழந்தையை பராமரிப்பதற்கு சில கருவிகளின் உதவிகள் தேவைப்பட்டன. வைத்தியசாலைக்குள் அமைதிப்படை நுழைந்ததால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக போதனா வைத்தியசாலை தன்னிலை இழந்துபோக, பிறந்த குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் போயிற்று என்று கூறியவர் சில நிமிடம் அமைதியானார்.
அவரது அமைதியைக் குலைக்க என்னாலும் முடியவில்லை. தன்னைச் சுதாகரித்துக் கொண்ட அவர் தானே குரல் தந்தார்.அமைதிப்படை வராமல் இருந்திருந்தால், இன்று என் குழந்தை உயிரோடு இருந்திருக்கும் என்று கூறியபடியே கையை விரித்து தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.
துயரம் சுமந்த மனத்தினராய் நம்மவர்கள் வாழ்கின்றனர் என்ற யதார்த்தத்தை அந்தப் பெரியவரின் துயரம் வெளிப்படுத்திக் கொண் டது.இதை நாம் கூறுவதானது இந்திய அமைதிப்படையைச் சுட்டிக் காட்டுவதற்காக அல்ல.மாறாக, இலங்கை நாட்டில் தமிழனாகப் பிறந்ததனால் நாம் இழந்தவை ஏராளம்.
உயிரிழப்பு, சொத்திழப்பு, தொழில் இழப்பு என்பவற்றுக்கு மேலாக எல்லாம் இழந்து போன வெறுமையில் வாழ்வைத் தொலைத்து யமதூதனின் வருகையை எதிர்பார்த்து வாழ்கின்றவர்கள் நம்மத்தியில் பலர் உளர்.
இதுவே உண்மை.
இன யுத்தத்தில் ஒவ் வொரு தமிழ் மகனும் ஏதோவொரு வகையில் இழப்புகளை அனுபவித்துக் கொண்டே இருக் கின்றான்.அதில் ஒன்றுதான் 1987இல் பெற்ற குழந்தையை பறிகொடுத்து விட்டு பிள்ளைச் செல்வம் இல்லை என்ற வேதனையைத் தன்னுள் சுமந்து கொண்டிருக்கும் அந்தப் பெரியவரின் சரிதம்.
நிலைமை இதுவாக இருக்க, நம் அரசியல்வாதிகளில் பலர் ஏதோ செய்கின்றனர்.
அரசியலை விமர்சிக்கின்றவர்களில் சிலர் தாங்கள் நினைப்பதும் எழுதுவதுமே நிதர்சனமானவை என்று அடம் பிடிக்கின்றனர்.என்ன செய்வது! அரசியலிலும் அரசியல் விமர்சனத்திலும் பங்கெடுப்போர் தங்கள் நலனை மட்டும் கருத்திலெடுக்கும்போது, தமிழினத்துக்காய் தமிழர்கள் இழந்தவை அர்த்தமற்றுப போகின்றன.
இந்த அபத்தம் இல்லாதுபோக, தமிழினத் தின் இழப்பறிந்தேனும் சொந்த நலன்களை துறந்து தர்மத்தின் பெயரால் ஒன்றுபடுவோம்.