கேள்வி கேட்க ஆளில்லை என்பதுதான் ஜனநாயகத்தின் முதலாவது ஆபத்து

அண்மைக்காலமாக தமிழ் அரசியல் தரப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையை உணர முடிகின்றது.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர்மாதம் 24ஆம் திகதி தமிழ் மக்கள் கூட்டணி என்ற அரசியல் கட்சியை  வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆரம்பித்ததையடுத்து இந்த விழிப்புணர்வு உச்சம் பெற்றது எனலாம்.

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியயான்றை ஆரம்பிப்பார் என சில தமிழ் அரசியல் கட்சிகள் எதிர்பார்த் திருக்கவில்லை.ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை முறியடிக்கும் வகையிலும் மாற்றுத் தலைமையின் அவசியத்தை அறிந்தும் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.அவர் ஆரம்பித்த புதிய அரசியல் கட்சி தொடர்பில் விமர்சனம் செய்கின்றவர்களும் இருக்கவே செய்வர்.

அத்தகைய விமர்சனத்தில் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவையானதா? என்ற கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.

இந்தக் கருத்து அவரவர் பார்வையின் பாற்பட்டதாயினும் இந்த நேரத்தில் மாற்றுத் தலைமையை உருவாக்காவிட்டால் எப்போது மாற்றுத் தலைமை தேவை  என்பதையாவது குறித்த விமர்சகர்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

உண்மையில் இப்போதிருக்கின்ற அரசியல் சூழ்நிலை தமிழ் மக்களுக்கு மிகவும் பாதமாக உள்ளது.
இத்தகைய பாதகத்தன்மைக்கு வித்திட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.இதைக்கூறுவதென்பது கூட்டமைப்புக்கு எதிரானதன்று.

மாறாக மிகப்பெரும் இழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு ஒரு பலமான-நேர்மையான அரசியல் தலைமை கிடைத்திருக்குமாயின் தமிழ் மக்களின் இன்றைய நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.
போரின் இழப்புக்களையும் சர்வதேச விசாரணைகளையும் வலியுறுத்துவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்து வந்ததன் காரணமாக தமிழினம் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் இழக்க வேண்டியதாயிற்று.

ஆம், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழு இலங்கை அரசுக்கு விதித்த நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதைக்கூட முன்வைக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா மனித உரிமை ஆணை யத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுப்பதை ஆதரித்துக் கொண்டது.

இங்குதான் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் பொறுப்பற்றதாக அமைந்துள்ளமை தெளிவாகிறது.
ஆக, சர்கார் படத்தில் நடிகர் விஜய் கூறுகின்ற; கேள்வி கேட்க எவரும் இல்லை என்ற நிலைமைதான் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்ற தத்துவம் கூட்டமைப்புக்கும் பொருத்தமானதாக இருந்தது.

அதனால்தான் தாம் நினைத்தபடி கூட்டமைப்பினர் செயற்பட்டனர். இந்நிலைமையை உணர்ந்து என்றைக்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதோ; என்றைக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் மாற்றுத் தலைமை உருவாகியதோ அன்று கூட்டமைப்பு திகைத்துக் கொண்டது.
இனி தமக்கான அரசியல் தலைமை எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்கள்.
யார் எந்த விமர்சனத்தைச் செய்தாலும் தமிழ் மக்களின் தீர்ப்பு மிகச்சரியானதாக இருக்கும் என்பதை காலம் உறுதி செய்யும்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila