புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கடுமையானது! ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா

புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான சட்டமூலத்தில் நெகிழ்ச்சித் தன்மை இருப்பது போன்று காண்பிக்கப்பட்டாலும் கடுமையான பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார்.
செவ்வியி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அனுபவமும் பின்னணியும் இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான பெரும்பாலான விமர்சனங்கள் மிக நியாயமாகவே அச் சட்டத்தின் உள்ளடக்கங்கள், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களோடு அதன் ஒவ்வாத் தன்மை மற்றும் அமுலாக்கலில் அதன் துஷ்பிரயோகம் ஆகியவற்றினை அமையப்படுத்தியிருந்தன.
எனினும், அத்தகைய கடுமையான சட்டம் தற்போது வரையில் நிரந்தரமாக நடைமுறையில் உள்ளது.


இந்தச்சட்டம் 1979 ஜுலை 19 ஆம் திகதி ஒரே நாளில் எந்த நோக்கத்திற்காக சட்டமாக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் முடிவடைந்து விட்டது.
அதனை அரசாங்கமே அறிவித்து பத்து வருடங்களை நெருங்கவுள்ள நிலையில் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து சர்வதேசத்தில் காணப்படுகின்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்குள் இலங்கையும் இலக்காகலாம். அதற்கு முன்னேற்பாடாக நடவடிக்கை எடுக்கும் போர்வையில் தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான ஏற்பாடுகள் கொண்ட சட்டமூலம் 1972ஆம் ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டங்களில் காணப்பட்ட ஒத்த ஏற்பாடுகளின் முக்கிய சில அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசாங்கத்தினால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் சட்டங்களை நீதித்துறை மீளாய்வு செய்வது என்பது அரசியலமைப்பின் மேலாண்மையை பாதுகாக்கும் ஒரு பொறிமுறைக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இயைபாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த உயர் நீதிமன்றிற்கு அனுப்பப்பட்டு நீதித்துறையால் மீளாய்வு செய்யப்படுகின்றது.
முன்னேற்றங்கள் குற்ற ஒப்புதலின் ஏற்றுக்கொள்ளல் தன்மை மற்றும் தடுத்து வைத்தல் ஆணைகளுக்கு எதிரான மேன் முறையீடுகள் மீதான கட்டுப்பாடு முதலியவை இச்சட்டமூலத்தின் சட்ட ஏற்பாட்டுப் பல்லவிகளிலிருந்து மனித உரிமை, மொழிநடை மூலம் இலகுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் நாம் உணர வைக்கப்படுகிறோம்.
எனினும் ஒரு நீதவான் தவிர்ந்த வேறு அதிகாரிகளுக்கு குற்ற ஒப்புதல் வழங்கல் இல்லாதிருப்பது, கைதிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சென்று பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளமை, நீதிவானினால் விடுக்கப்படும் தடுத்து வைத்தலுக்கான ஓர் இடைக்கால உத்தரவிற்கெதிராக மேன்முறையீடு செய்வதற்கான உரிமை ஆகியன இச்சட்டமூலத்தில் சிறந்த அம்சங்களாக கொள்ள முடியும்.
இலக்காவோர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலாகின்றபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் அல்லது ஆயுதப்படை உறுப்பினர் ஒருவரின் தற்றுணிபில் எந்தவொரு பிரஜையும் ஒரு 'பயங்கரவாதி” என்று கருதப்படமுடியும்.
மேலும் அமைச்சரின் விருப்பப்படி, எந்தவொரு நிறுவனமும் “பயங்கரவாத” அமைப்பாக தடை செய்யப்பட முடியும், எழுதுதல், எதிர்ப்பு தெரிவித்தல், பொது இடங்களைச் சென்றடைதல், சக பிரஜைகளுடன் நட்பு கொள்ளல் மற்றும் நம்புதல் என்ற இவை அனைத்தும் ‘பயங்கரவாத செயல்களாக’ கருதப்படலாம்.
விசாரணைகள் சந்தேகத்தின் பேரில் ஒரு பிடியாணையின்றி கைது ஒன்றைச் செய்வதற்கும் வெறும் சந்தேகத்தின் பேரில் அமைவிடங்கள் “பயங்கரவாத” செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படையில் அவ்விடத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தேடுதல் செய்வதற்கும், எந்த பொலிஸ் அதிகாரிக்கும் அல்லது ஆயுதப்படை உறுப்பினருக்கும் அல்லது ஒரு கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் புதிய சட்டம் அனுமதி வழங்குகிறது.
இதனால் அதிகாரத் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்கு இருக்கவேண்டிய பாதுகாப்பு தற்போதைய வடிவத்தில் “விருப்பத் தெரிவாக” காணப்படுகின்றது.
ஏனவே, கைதுசெய்யும் காலத்தில் அக்கைதுக்கான காரணத்தை அந்நபருக்கு அறிவிக்காதிருப்பதோ சந்தேக நபருக்கு புரியும் மொழியில் அதனை விளக்கிக்கூறாது விடுவதோ இச்சட்டத்தின்கீழ் சட்டவிரோதமானதல்ல.
ஒரு பெண் சந்தேக நபரை ஆண் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைதுசெய்வதும் சட்டவிரோதமானதாக இருக்காது.
விருப்பப்படியாக தடுத்துவைத்தல், பயங்கரவாதத் தடைச் சட்டம், பாதுகாப்பு அமைச்சருக்கு தாம் இச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்படும் ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்று சந்தேகிப்பதற்கான காரணம் இருக்கும் ஒரு நபரை தடுத்து வைக்குமாறு கட்டளையிடுவதற்கு வகை செய்கின்றது.
அத்தகைய தடுத்து வைப்பு தொடர்ந்தேர்ச்சியாக மூன்று மாதங்கள் வரையாகும் என்பதோடு, அதனை மொத்தம் 18 மாதங்கள் வரை புதுப்பிக்கவும் முடியும்.
ஆனால் புதிய எதிர்ப்புச் சட்டத்தில் சந்தேக நபர் ஒரு குற்றம் புரிந்துள்ளார் அல்லது சம்பந்தப்பட்டுள்ளார் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் திருப்தியுறுவாராயின், அவரால் தடுத்து வைத்தல் ஆணைகள் வழங்கமுடியும்.
அத்தகைய தடுத்து வைப்பு தொடர்ந்தேர்ச்சியாக 14நாட்கள்; வரையாகும் என்பதோடு, அதனை ஆறு மாதங்கள் வரை புதுப்பிக்கவும் முடியும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9ஆம் பிரிவின் கீழ் பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த தடுப்புக் காவல் வழங்கும் அதிகாரம் பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டத்தின், (31ஆம் பிரிவின் கீழ்) பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சருக்கு இருந்த தடுத்துவைக்கும் அதிகாரங்கள் மாகாண ரீதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டு விட்டதாக அரசினால் அறிவிக்கப்பட்டாலும் அவசரகால ஒழுங்கு விதியில் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த தடுத்து வைக்கும் அதிகாரமும் மாகாணரீதியாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பிரித்தானியர் ஆட்சிக் காலத்திலிருந்து நமக்கு வழி வழியாக வந்து சேர்ந்த சான்றுகள் கட்டளைச் சட்டம் பொலிஸ் தடுப்புக் காவலில் இருக்கும் போது உத்தியோகத்தருக்கு வழங்கிய குற்ற ஒப்புதலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கியது.
அத்தகைய குற்ற ஒப்புதல்கள் ஒரு நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டிருந்தால் ஒழிய, அவை சான்றுகளாக சேர்த்துக் கொள்ளப்படாது விட்டன.
ஆனால் இச்சட்டமூலம் அப்பாதுகாப்பை நீக்கி ஒரு குற்ற ஒப்புதல் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டுமெனில் அது உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு குறையாத பதவி வகிக்கும் ஓர் உத்தியோகத்தர் முன்னிலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது.
மேலும் இச்சட்டமூல ஏற்பாட்டின் பிரகாரம் நீதவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்படவேண்டும்.
ஆனால் நீதவான் முன்னர் குற்றஒப்புதல் வாக்குமூலத்தினை பதிவுசெய்ய கைதியை அழைத்துப்போவது கைதியை கைது செய்து தடுத்து
வைத்து விசாரணை செய்த பொலிஸாரேயாகும் என்பதுடன் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதியப்பட்ட பின்னர் மீண்டும் பொலிஸ் காவலுக்கே கைதி கொண்டு செல்லப்படுகின்றார்.
சித்திரவதை பொலிஸாரின் சித்திரவதையினால் கண்ணுக்குப்புலனாகும் காயங்களின் அறிகுறிகளுக்காக ஒரு நபரை பார்வையிடுவதற்கும் சந்தேக நபரை சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரிடம் அனுப்பிவைப்பதற்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகின்றமையானது யதார்த்த நிலைமைகளை இச்சட்டம் மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
வேறு வகையில் கூறுவதாயின், பாதிக்கப்பட்டவர் காயமடைந்துள்ளாரா என்பதை தீர்மானிப்பதற்கு சித்திரவதை புரிவோருக்கே இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.
நீதிவானுக்கு அதிகாரம் இல்லை புதிய சட்டமூலத்தில் ஒரு தடுத்து வைத்தல் ஆணையைப்பற்றி கேள்வி எழுப்புவதற்கு நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு, சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்கு செயல்வலு வழங்க மாத்திரமே முடியும்.
கைதியின் தன்மையை சுயாதீனமாக மதிப்பிட்டு, கைதிற்கான காரணம் அற்பமானது என்று நீதிவான் கருதினாலும் ஒரு நபரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
மேலும், ஒரு நபர் சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ளார் என்று நீதிவான் கண்டால், அந்நபரை விடுதலை செய்வதற்கு நீதிவானுக்கு அதிகாரம் இல்லை என்பதோடு, சிகிச்சையின் பின்னர் அந்நபரை மீண்டும் விளக்கமறியலுக்கே அனுப்ப தலைப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கான கட்டுப்பாடு நீக்கம் எமது அரசியலமைப்பில் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் அவசரகால நிலைகளுக்கான ஏற்பாடுகளை வழங்குவதோடு, அத்தகைய நிலைமைகளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதிக்கு பெருமளவு அதிகாரங்களையும் வழங்குகிறது.
எனினும், பிரகடனப்படுத்தப்பட்ட ஏதேனும் அவசரகால நிலை ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பதனால், ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தது.
அவ்வாறிருக்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி நாட்டு பிரஜைகளை அரச அடக்குமுறைக்கு உள்ளாக்குவதாக உள்ளது.
மேலும் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் நடைமுறையிலிருக்கும் போது, தேடுதல் பிடியாணையின்றி,கைது செய்தல், தடுத்து வைத்து விசாரணை செய்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய விடயங்களில் பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் பரந்தளவிலான அதிகாரங்களை இச்சட்டமூலம் வழங்குவதானது, ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறகலாக்கவே முனைகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
அத்தியாவசிய சேவை எந்தவொரு அரசாங்கச் சேவையையும் ஓர் அத்தியாவசியச் சேவையாக அறிவிப்பதற்கான முழுமையான தற்துணிபும் ஜனாதிபதிக்கு உண்டு.
எனவே, எந்தவொரு விடயத்தினையும் ஜனாதிபதி அத்தியாவசியச் சேவையாகத் தீர்மானித்து அதனை வர்த்தமானியில் அறிவிப்பாராயின், அப்பணிப்புரைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் பிரஜைகள் ஓர் அத்தியாவசியச் சேவையைத் ‘தடுப்பதாக” அல்லது முக்கிய ‘உட்கட்டமைப்பில்’ தலையிடுவதாகக் கருதப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஒரு “பயங்கரவாத”க் குற்றத்தைப் புரிந்த குற்றவாளியாகவே கொள்ளப்படுவார்.
மௌனமும் குற்றமே பயங்கரவாத தடைச் சட்டத்தின் 5ஆம் பிரிவின்படி பொலிஸாருக்கு தகவல் வழங்கத்தவறினால் அச் செயல் குற்றமாகக்கருதப்பட்டு ஆகக்கூடிய தண்டனையாக நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும்.
ஆனால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் 31ஆம் பிரிவில் வெறுமனே “பயங்கரவாத” செயல்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஓர் நபருக்கு அபயமளித்தலை அல்லது அவருடன் தொடர்பு கொண்டிருத்தலை குற்றமாகக் கொள்ளமுடியும்.
ஓர் ஆளின்மீது சந்தேகம் கொண்டதும் “பயங்கரவாத” சந்தேக நபர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ள எல்லா நபர்களும் சம்பந்தப்பட்ட நபரை சிறிது தள்ளி வைக்கவேண்டுமென்று அல்லது அதைவிட மோசமாக, அவரது “சந்தேகத்துக்குரிய” செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டுமென்று கோருவதோடு, அதன்படி செயல்படத் தவறும் பிரஜைகளுக்கான தண்டனைகளையும் விதித்துரைக்கிறது.
மரண தண்டனை இச் சட்டமூல ஏற்பாடுகளின் படி குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களல்ல என்பது ஆறுதலளிக்கும் விடயமாகும்.
மரணதண்டனை விதிக்காமை அரசியல் எதிராளிகளை தியாகிகளாக்கி விடவேண்டியதில்லை என்ற ஒரு விருப்பத்தினால் தூண்டப்பட்டிருக்கலாம்.
அதற்கு மேலாக, நீதியின் வழமையான நியமம் மிகவும் பாரதூரமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ள விசாரணைகளைத் தொடர்ந்து ஆட்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது சிந்திப்பதற்கு மிகவும் கொடூரமான அம்சமென உணரப்பட்டிருக்கலாம்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வாசகம் 4(அ) மற்றும் (ஆ) ஆகியன ஓர் ஆளிற்கு மரணத்தை விளைவிக்கும் எந்தவோர் ஆளிற்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்பாடு செய்கிறது.
எனினும் ஓர் ஆளிற்கு மரணத்தை விளைவிக்கும் எந்தவோர் ஆளிற்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 ஏற்பாடு செய்கிறது.
எனவே, “அரசியலமைப்பின் உறுப்புரை 12(1)ஐ சட்டமூல ஏற்பாடு மீறுகின்றது” என உயர் நீதிமன்று தீர்மானிக்குமாயின் மரணதண்டனை உள்வாங்கப்படலாம்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296ஏற்பாடு உள்வாங்கப்பட்டுள்ளது.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்த எந்த வழக்கிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் குற்றச் சாட்டுகள் சுமத்தப்படவில்லை.
ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸார் முப்படையினருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் உள்வாங்கப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 296 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் பொழுது எதிரிகள் ஜுரிகள் சபையின் முன்னிலையில் வழக்கு விசாரணையை கோரமுடியும், நடராஜா ரவிராஜ் வழக்கில் சிங்கள ஜுரிகள் சபையின் முன்னிலையில் வழக்கு நடத்தப்பட்டு எதிரிகள் விடுதலையாகிய நிகழ்வினை உதாரணமாக கூறலாம்.
மௌனம் காப்பது ஏன்?
இந்நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டமானது, பயங்கரவாதத் எதிர்ப்புச் சட்டமாக பெயர் மாறியுள்ளது. ஆங்கிலத்தில் பி.ரி.எ.யானது சி.ரி.எ.ஆக மாற்றப்பட்டுள்ளது.
எமது நாட்டின் வரலாற்றைப் பார்த்தால் பயங்கரவாத தடைச் சட்ட மூலம் எமது பிரஜைகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரத்தினை தற்போது
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
2) நாம் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், என்ற வடிவத்தில் நிரந்தரமான பயங்கர நிலையின் கீழ் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படுகின்றதா?
நிறைவேற்று அதிகாரிகளினால் மனம்போன போக்கில் பயங்கரவாதிகளாக அடையாளப் படுத்தப்படுகின்றோமா? மோதல்கள் முடிவுற்று பத்து ஆண்டுகளாகின்ற நிலையில், இலங்கை பிரஜைகளின் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிக் கொள்வதையும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதையும் தவிர வேறு எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையாது.
நீதித்துறை மீளாய்வு செய்து பாராளுமன்றத்திற்கு பாரப்படுத்தியதும் சில திருத்தங்களுடன் சட்டமாக்கப்பட்டு எமது சட்டப் புத்தகங்களில் நிரந்தரமாக இடம்பிடித்துவிடும்.
ஜனநாயகப் பரப்பை சுருங்கவைத்துக் குறுகலாக்கும் வல்லமைகொண்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக மனித உரிமை
நிறுவனங்கள், ஜனநாயத்திற்காக குரல்கொடுக்கும் அரசியல் தலைமைகள், பொது அமைப்புக்கள் மௌனம் சாதிப்பது அவதானிக்கத்தக்கதும் ஆச்சரியமானதுமாகும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila