குறித்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, மூர்து பெர்னாண்டோ மற்றும் இ.ஏ.ஜி.ஏ. அமரசேகர உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுவதாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக குறித்த மனுவை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சரத் என். சில்வா சிவில் உடையில் வருகைதந்து சட்டத்தரணி ஆசனத்தில் அமர்ந்தமை தொடர்பாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மருதானை சந்தியில் வைத்து தேசிய ஒருமைப்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் நிகழ்த்திய உரையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக சரத் என் சில்வா மீது குறித்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர உள்ளிட்ட மூவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.