சிறீதரன் எம்.பியிடம் நடந்த விசாரணை: திரைமறைவில் நடப்பது என்ன!

 கடந்த பத்தாம் திகதி யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Sridharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை தற்போது அரசியல் வட்டாரத்தில் பாரிய பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலக தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக சிறீதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சிறீதரனை தடுத்து நிறுத்துமாறு சிஐடியினர் மூலம் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தங்களுடைய கடவுச்சீட்டில் பிழை இருக்கின்றது என்றும் அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்றும் சிறீதரனிடம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக சிறீதரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.

தனது புதிய கடவுச்சீட்டின் ஊடாக சிறீதரன் இதுவரை நான்கு முறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இதுவரையில் கடவுச்சீட்டில் பிழை இருப்பதாக எப்போதும் அறிவிக்கப்பட்டதில்லை ஆனால் தற்போது முதல்முறையாக இவ்வாறு அறிவிக்கப்படுவதால் இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீதரன் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இராஜதந்திர கடவுசீட்டினை வைத்திருக்கும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை இவ்வாறு நடத்தியதை ஏற்று கொள்ள முடியாது என வன்மையாக கண்டிருந்தார்.

அத்தோடு, இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றி இருந்த நிலையிலேயே அவர் விமான நிலையத்தில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், கட்சிக்குள் காணப்படுகின்ற உள்ளக பிரச்சினைகள் காரணமாக சிறீதரன் பழிவாங்கப்படுவதாக ஒரு தரப்பு தெரிவிக்கின்றது.

அத்தோடு, அடுத்தக்கட்ட அரசியலை நோக்கிய சிறீதரனின் இதுபோன்ற நகர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சிலர் இவ்வாறு தடைகளை ஏற்படுத்தி ஒரு இக்கட்டான சூழ்நிலையை சிறீதரனுக்கு உருவாக்குவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பில் சிறீதரன் தரப்பினரை இன்று (12) எமது ஐபிசி தமிழ் ஊடகம் தொடர்பு கொண்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டமை குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் உத்தியோகப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக கனடா சென்ற போது இது மாதிரியான எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் ஆனால் தற்போது இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் சரியான காரணம் தெரியவரவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தசம்பவம் குறித்த அடுத்தக்கட்ட விடயங்களையும் ஊடகங்கள் வாயிலாகத்தான் தனக்கு அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு புறம் இந்த நடவடிக்கை, அநுர அரசுக்கொதிராக சிறீதரன் முன்வைத்த கருத்துக்கள் காரணமாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் மறுபுறம் உள்ளக கட்சி சிக்கல் காரணமாக பழிவாங்கப்படும் ஒரு எண்ணத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் அரசியல் வட்டார தகவல்கள் உட்பட பலதரப்பட்ட ஊடகங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila