1957ல் பண்டாரநாயக்க திட்டமிட்டு உருவாக்கிய சிங்கள ஸ்ரீ போராட்டத்திலிருந்து, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்வரை தமிழரின் மொழிவழி உரிமைப்போர் தொடர்கிறது. நிலத்தையும் மொழியையும் காப்பதற்கான நிலையிழந்து உட்கட்சி அரசியலில் மோதிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சி இதனை எவ்வாறு கையாளப்போகிறது?
ஈழத்தமிழரின் ஒரு நூற்றாண்டுகால வாழ்வியலைத் திரும்பிப் பார்க்கின் எந்தவொரு நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் அவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டேயிருப்பவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதனால் இவர்களை போராடப் பிறந்தவர்கள் என்றும் சொல்லலாம்.
உரிமை மறுக்கப்படுவது, இருக்கும் அற்ப சொற்ப உரிமைகளையும் மறுப்பது, ஒடுக்கப்படுவது, நசுக்கப்படுவது, கைது செய்வது, காணாமலாக்கப்படுவது, கொல்லப்படுவது என்ற தொடரில் அவர்கள் நிலவுடமை பறிக்கப்படுவது, திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், இராணுவ முற்றுகை என்று தமிழர்களின் தொடர் போராட்டத்துக்கு நூறுக்கும் அதிகமான காரணங்கள் உண்டு.
சிலவேளைகளில் தேவையற்ற சில நெருக்குவாரங்களை தெரிந்தோ தெரியாமலோ சிலர் மேற்கொள்ளும்போது அதிலிருந்து விடுபடவும் போராட வேண்டியுள்ளது. தற்போது, யாழ்ப்பாணத்தில் இந்தியா நிர்மாணித்துக் கொடுத்த பொது மண்டபத்தின் பெயர் மாற்றம் அவ்வாறான ஒரு நிலைமையை மெதுவாக உருவாக்கியுள்ளது.
1931ம் ஆண்டு இலங்கையின் சட்டசபைத் தேர்தலை யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் பகி~;கரித்து நடத்திய போராட்டத்தையே ஈழத்தமிழர்களின் முதலாவது போராட்டம் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. 1927ம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின் வடிவமே யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் நடத்திய தேர்தல் பகி~;கரிப்பு போராட்டம் என்று தென்னிலங்கை குற்றஞ்சாட்டியது.
ஆனால், தேர்தல் பகி~;கரிப்பு வேளையில் ஜவகர்லால் நேரு தமது விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை காரணம் காட்டி, அவரால்தான் தமிழரின் தேர்தல் பகி~;கரிப்பு இடம்பெற்றதென அப்போது எவரும் முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடவில்லை. இன்று, திருவள்ளுவர் பெயரிலான யாழ்ப்பாணத்து மண்டபம் என்ற விவகாரம் தொடர்ந்து செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை.
இந்திய மத்திய அரசின் நன்கொடையாக அந்நாட்டு நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டு 2023ல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாலும் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசங்கவினாலும் திறந்து வைக்கப்பட்ட இந்த மண்டபத்துக்கு ஷயாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்| எனப் பெயரிடப்பட்டிருந்தது. (இது பேருந்து தரிப்பு மத்திய நிலையம் போன்ற வாசத்தைக் கொண்டது). கடந்த மாதம் 18ம் திகதி அநுர அரசின் பிரதியமைச்சரும் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்து கொண்ட விழாவில் யாழ்ப்பாணம் என்ற பெயர் அகற்றப்பட்டு திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.
இப்பெயர் மாற்றத்துக்கு யாழ்ப்பாணத்திலுள்ள சில அரசியல்வாதிகளும் வேறு சிலரும் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆராய்ந்த தமிழரசுக் கட்சி அதன் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானத்திடம் இதனைக் கையாளும் பொறுப்பை ஒப்படைத்தது. இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்வு விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பு அவசியமென்பதால் இந்தியாவைப் பகைக்காமல் மென்போக்கில் நிலைமையைக் கையாளுமாறு சிவஞானத்திடம் தெரிவிக்கப்பட்டது.
வடமாகாண முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானக் கடிதத்தை அன்றைய வடமாகாண ஆளுனரிடம் கையளிப்பதை திடீரென தமது கையுள் சுமந்திரன் ஆதரவாளர்கள் திணித்ததாக அன்று திரு. சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது. அதுபோன்றே இப்போதும் திருவள்ளுவர் மைய விவகாரம் தம்மிடம் திணிக்கப்பட்டதாக இவர் கூறுவாரென நினைக்கவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்த 13ம் திருத்தத்தை இதுவரை ஒப்பேற்றத் தவறி வரும் இந்தியா இவ்விடயத்தில் இலங்கை அரசுக்கும் ஈழத்தமிழருக்கும் பெப்பே காட்டி வருவதுபோல அதனது யாழ்ப்பாணக் கட்டிடத்துக்கு ஷயாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்| என பெயர் சூட்டியுள்ளது.
நிலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குச் சொந்தமானது. கட்டிடத்துக்கான நிதி இந்திய அரசினுடையது. கட்டிடத்தின் பெயர் திருவள்ளுவர் பண்பாட்டு மையம். திறக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குள் சூட்டப்பட்ட மூன்றாவது பெயர் இது. இவ்வாறு கூறுவதால் ஈழத்தமிழர்கள் திருவள்ளுவரை விரும்பாதவர்கள் என்று அர்த்தமில்லை. பல வருடங்களுக்கு முன்னர் தொடர்ந்து திருக்குறள் மாநாடு வடமாகாணத்திலேயே இடம்பெற்று வந்தது. ஈழத்தமிழ் மண்ணில் இம்மாநாட்டை நடத்தியவர் பண்டிதர் கா.பொ.இரத்தினம். இவர் கிளிநொச்சி மற்றும் ஊர்காவற்றுறை தொகுதிகளின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருந்தவர். திருவள்ளுவருக்கு வருடாந்தம் பிரமாண்டமான விழாக்களை எடுத்த பெருமகனார் இவர்.
பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்கள் வள்ளுவம் ஊடாக தமிழ்மொழியை ஏற்றியும் போற்றியும் வளர்த்தவர். 1970களில் கொழும்பு ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் (லேக்ஹவுஸ்) நாடாளுமன்ற செய்தியாளராக நான் கடமையாற்றியவேளை பண்டிதரை அடிக்கடி சந்திப்பதுண்டு. நாடாளுமன்ற அமர்வின் எல்லாவேளையிலும் இவர் எழுப்பும் கேள்வி தமிழ்மொழிப் பயன்பாடு சம்பந்தமானது. முக்கியமாக, இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்துகளிலும், தபால் நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்ற தமிழ்க் கொலைகளை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விளக்கம் கோருவார். இதனால் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் இது தொடர்பான விபரங்கள் பண்டிதர் இரத்தினத்துக்கு தபால் மூலம் வந்துசேரும். அவர் இன்றிருப்பாராயின் யாழ்ப்பாண இந்திய மண்டபத்துக்கு நேர்ந்த கதிக்கு நேர்த்தியாக பதிலளித்திருப்பார். வளைந்து நெளிந்து கேள்வியெழுப்பும் பாணி அவருக்கு ஒத்து வராதது.
இரண்டாண்டுகளில் மூன்று தடவை பெயர் மாற்றம் கண்ட இக்கட்டிடத்துக்கு என்றோ ஒரு நாள் நரேந்திர மோடி மையம் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படின் ராஜிவ் காந்தி மையம் என்று பெயர் மாற்றம் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மையம் என்பதற்கு உடலம் என்றும் ஓர் அர்த்தமுண்டு. இன்றைய நிலையில் இவ்வாறான விடயங்களில் முற்கூட்டியே செயற்பட வேண்டிய தமிழர்களின் தலைமை அரசியலமைப்பான தமிழரசுக் கட்சி இவ்விடயத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த முடியாது சிதறுண்டு கிடக்கிறது. கட்சிக்கான தலைவரும் பொதுச்செயலாளரும் தற்காலிகமானவர்கள். (இதற்குப் பதில் என்று பெயர் சொல்லப்படுகிறது). கட்சியின் எதிர்காலம் நீதிமன்றத் தீர்ப்பில் தங்கியிருக்கிறது. தீர்வு எவ்வாறு வந்தாலும் பிரச்சனை தீரும் போல் இல்லை.
கட்சித் தலைவர் பதவியில் வெற்றி பெற்ற சிவஞானம் சிறீதரனும் படுதோல்வி கண்ட சுமந்திரனும் இப்போதும் அந்தக் கதிரையில் கண் வைத்தவாறே மோதிக்கொண்டிருக்கிறார்கள். உட்கட்சி மோதல் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நகர்ந்து நாடாளுமன்றத்தின் படியேறியுள்ளது. தமிழகத்தில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்குபற்றுவதற்கு விமானம் ஏறச்சென்ற சிவஞானம் சிறீதரன் தாம் தடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்; பயணம் செல்ல அனுமதிக்கப்பட்டதற்கு நியாயம் கோரியிருக்கிறார்.
அதேசமயம், இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் எம்.பி.சுமந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்த கருத்துக்கு விசாரணையும் கேட்டுள்ளார். உரிய விசாரணை இடம்பெறுமென அநுர அரசாங்க தரப்பு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. இப்போது தமிழரசுக் கட்சியின் தெரிவான தலைவரும் அப்பதவிக்குத் தெரியப்படாதவரும் தங்கள் போராட்டத்தை நாடாளுமன்றம் ஊடாக சகலருக்கும் தெரிய வைத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காலத்தை இது நினைவூட்டுகிறது. பார்க்கப் போனால் தமிழரசுக் கட்சியை அழிப்பதற்கு வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை. உள் இருப்பவர்களே போதும்.
1968ல் அடையாள அட்டை மசோதாவின்போது அமிர்தலிங்கத்துக்கும் காவலூர் வி. நவரத்தினத்துக்குமிடையிலான மோதல், 1977 பொதுத்தேர்தலின்போது அமிர்தலிங்கத்துக்கும் மட்டுநகர் செல்லையா இராஜதுரைக்கும் இடையிலான மோதல் போன்று சுமா - சிறீதரன் மோதலும் வளர்ச்சி பெற்று வருவது தெரிகிறது. உள்;ராட்சித் தேர்தல் நடைபெறுமாயின் அப்போது இப்பிரச்சனையைக் கையாளும் நிலையில் நிரந்தரத் தலைவரும் செயலாளரும் இல்லாத தமிழரசுக் கட்சி என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை.
அதுவரை விவகாரத்தை ஒத்தி வைத்துவிட்டு தமிழர்களின் தொடர் போராட்டத்தினை மேலும் பார்க்க வேண்டியுள்ளது. திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் மாற்றம் மொழிவழி கலந்த பண்பாட்டு மாற்றமாகும். இலங்கைத் தமிழர்களின் மொழிவழிப் போராட்டம் பண்டாரநாயக்க ஆட்சியின்போது திணிக்கப்பட்ட சிங்கள ஷஸ்ரீ| எழுத்துடன் ஆரம்பமானது. அரச வாகனங்களிலும் தனியார் வாகனங்களிலும் இலக்கத் தகடுகளில் ஆங்கிலத்திலான எழுத்துகளுக்குப் பதிலாக சிங்கள ஷஸ்ரீ|யை புகுத்தியதால் 1958 மார்ச் மாதம் 29ம் திகதி அதற்கான எதிர்ப்பியக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் இளையோர் சிங்கள ஸ்ரீ எழுத்துகளை தார்களால் அழித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
அன்று தமிழ் இளையோர் மேற்கொண்ட எழுச்சி, அரசியல் நோக்கம் கொண்டதல்ல. சிங்கள மொழிக்கோ சிங்கள இனத்துக்கோ எதிரானதல்ல. தங்கள் இன அடையாளத்தை அழித்து இன்னொரு மொழியைத் திணிக்கும் அரச வன்முறைக்கெதிரான உரிமைப் போராகவே காணப்பட்டது.
இந்த எழுச்சிப் போராட்டம் 1961ல் தமிழர் தாயகத்தில் அரசுக்கெதிரான சத்தியாக்கிரக போராட்டத்துக்கு வழிகாட்டியாக அமைந்தது. 1970ல் அரச பயங்கரவாதத்தை, ஆயுதங்களை ஆயுதங்களால் சந்திக்கும் போராட்டத்துக்கும் இதுவே வழிகோலியது.
ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையம் என்ற பெயரோடு கால் பதித்த இந்தியா இப்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றி அரசியல் செய்வதைப் பார்க்கும்போது 1987ல் அரிசி - பூசணிக்காய் பொதியோடு விமானம் வழியாக பயணித்ததே நினைவுக்கு வருகிறது.
ஈழத்தமிழருக்கு இன்று தேவையானது கட்டிடங்களோ, பெருந்தலைவர்கள் பெயர்களிலான விழாக்களோ, இறக்குமதியாகும் பட்டிமன்றங்களோ அல்ல. உயிருக்கும் உரிமைக்குமான உத்தரவாதமும் நிலத்துக்கான பாதுகாப்புமே இன்று வேண்டப்படுபவை. அன்பளிப்புக் கட்டிடங்கள், மண்டபங்கள் என்ற பெயரில்கூட நிலத்தை பறிகொடுக்க முடியாது.