பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட கோத்தபாயவின் உத்தரவில் கடற்படையினரால் கடத்தப்பட்டு கிழக்கில் படுகொலை செய்யப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
தற்போதைக்கு வெளிநாட்டில் வதியும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாயான பிரியசாந்தவின் தகவல்களின் பிரகாரம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, மட்டக்களப்பின் எருமைத் தீவில் கருணா முகாமில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் குறித்த சிப்பாய் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மட்டக்களப்பின் எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் மற்றும் கருணா குஞழுக்கள் மூலமே வடகிழக்கிலும் கொழும்பு உள்ளிட்ட தென்னிலங்கையிலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் சிங்கள செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.