எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !

 சுதந்திரம் என்பது நிர்பந்திக்கப்படுவதல்ல மாறாக உணரப்படுவதாகும்.ஈழத் தமிழ் மக்கள்மீது சுதந்திரதினம்கூட கொண்டாட நிர்பந்திக்கப்படுமொரு நாளாக இருக்கையில் தான் அவர்கள் புறக்கணிப்பை ஆயுதமாக கையில் எடுக்கிறார்கள்.

இந்த தீவில் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைகளை இழந்து அடிமைகொள்ளப்பட்ட நினைவுநாளாகவே சிறிலங்கா சுதந்திரதினம் இருக்கிறது. 77 ஆண்டுகளை அடையும் சிறிலங்கா சுதந்திரதினம் நமக்கு அளித்த அனுபவங்கள் என்பது ஒடுக்குமுறையின் நெடுத்த வடுவாகும்.

அதைவிடவும் சிறிலங்கா சுதந்திரதினம் என்பது ஈழத் தமிழர்களுக்கும் அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான அர்த்தத்தில் நினைவுகொள்ளப்பட்டு வந்த அனுபவங்களும் நாம் மறந்துவிட முடியாதவை. 

77ஆவது சுதந்திரதினம் 

இன்றுசிறிலங்காவின் 77ஆவது சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட இருக்கிறது. பண்டைய இலங்கைத்தீவு பல்வேறு தமிழ், சிங்கள மன்னர்களால் ஆளப்பட்ட நிலையில், யாழ்ப்பாண அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு என்ற அரச முறைகள் நிலவிய காலத்தில் இலங்கைக்குள் அந்நியர்கள் குடியேறினர். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர்கள் இலங்கையை ஆட்சி செய்து வந்த நிலையில், 1948 ஆம் ஆண்டில் அன்றைய சிலோன் என ஒன்றிணைக்கப்பட்ட இலங்கைத்தீவுக்கு சுதந்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.

எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே ! | Independence Day Srilanka Article Tamil

132 வருடங்கள் பிரித்தானியர்கள் சிலோனை தமது காலனித்துவ நாடாக ஆட்சி புரிந்திருந்தனர்.இந்த நிலையில், 1948 பெப்ரவரி 4 ஆந் திகதி சிலோன் இலங்கை டொமினியன் அந்தஸ்துடைய சுதந்திரத்தைப் பெற்றிருந்து.

பிரிட்டிஷ் பொதுநலவாயத்தினுள் 1972 மே 22 இல் அதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு டொமினியன் அந்தஸ்து எனும் நிலை தொடர்ந்ததுடன், குடியரசாக மாற்றம் பெறும் வரை இலங்கைக் குடியரசாக மீளப் பெயரிடப்பட்டது. சிலோனின் முதல் பிரதமராக டி.எஸ். சேனநாயக்கா பதவி ஏற்றுக்கொண்டு அன்றைய பிரித்தானியப் பிரதமரான Clement Attlee இன் வாழ்தைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் இவ்வாண்டு சிறிலங்கா அரசு சுதந்திரதின ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

விடுதலையில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு   

இலங்கை சட்டவாக்கத்துறையின் முதல் இலங்கை உறுப்பினர் என்ற பெருமையையும் அடையாளத்தையும் கொண்டிருந்த சேர் பொன் இராமநாதன், அன்றைய காலத்தில் இலங்கை மக்களின் விடுதலைக்கும் உரிமைக்கும் குரல் கொடுத்தார். சிலோன் சுதந்திரம் குறித்து வலுவான உரையாடல்களும் போராட்டங்களும் நடந்த காலத்தில் அன்றிருந்த காலத்தில் சிங்கள அரசியல்வாதிகளைவிடவும் சிறப்பாக இயங்கியவராக சேர் பொன் இராமநாதன் அறியப்படுகிறார்.

எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே ! | Independence Day Srilanka Article Tamil

அத்துடன்  அன்று போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக சிறையில் வைக்கப்பட்ட டிஎஸ் சேனநாயக்காவை இலங்கைக்கு மீட்டு வந்தவரும் இவர்தான். இதனால்தான் இவரை சிங்களவர்கள் தங்கள் தோளில் வைத்து கொண்டாடிய நிகழ்வும் நடந்தது. சிலோனின் முதல் பிரதமரை சிறையில் இருந்து மீட்டு வந்த ஈழத் தமிழர்கள், கல்வியிலும் பொருளாதாரத்திலும் அன்று சிறந்து விளங்கினார்கள்.

அத்துடன் சுதந்திரத்திற்கு முந்தைய ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகள் அன்று ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்கியது. என்றபோதும் வடக்கில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்றிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTA) ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தது. சிலோனின் விடுதலையிலும் சிலோனின் முதல் ஆட்சியிலும் தமிழர்கள் அளித்த ஆதரவும் பங்களிப்பும் முக்கியமானது. 

ஏமாந்த ஈழத் தமிழர்கள் 

இவ்வாறு சிலோனின் உருவாக்கத்தில் ஈழத் தமிழர்கள் பெரும் பங்களிப்பை வழங்கிய போதும், பின் வந்த காலத்தில் பெரும்பான்மையின ஆதிக்கம் தலையெடுக்கத் தொடங்கியது. இதனால் மொழி, உரிமை, நிர்வாகம், பண்பாடு என அனைத்திலும் ஈழத் தமிழர்கள் புறந்தள்ளப்பட்டார்கள். சேர் பொன் இராமநாதனை தோளில் சுமந்த பெரும்பான்மையினம் ஈழத் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கத் துவங்கியது. 48இல் சுதந்திரம் கிடைத்தது. எட்டு ஆண்டுகளில் ஈழத் தமிழ் மக்கள் எதிர்பாராத ஒரு  பெரும் ஒடுக்குமுறைத் திட்டத்தை சந்தித்தார்கள்.

எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே ! | Independence Day Srilanka Article Tamil

அதுதான் 1956 தனிச்சிங்களச் சட்டம். சிங்களமே ஆளும் மொழியாகவும் வாழும் மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் மொழியை அடக்கி அழிக்கும் ஆயுதமாக முன்வைக்கப்பட்டது. அன்றைய தமிழ் தலைவர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள்.

தமிழ் தலைவர்கள் மாத்திரமின்றி சுதந்திர சிலோன் காலத்தில் இருந்து வந்த சில சிங்களத் தலைவர்களும் தனிச்சிங்களச் சட்டமே ஆபத்தானது என்றும் அதுவே இன்னொரு நாட்டை உருவாக்கப் போகிறது என்றும் எச்சரித்தார்கள். தனிச்சிங்கள சட்டத்தை கடுமையாக எதிர்த்த இடதுசாரிகள் அக் காலத்தில் இது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் பிற்காலத்தில் நடந்ததேறிய தீர்க்கசரினங்களாகின. 

தனித் தமிழீழத்திற்கு அத்திவாரம் 

லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லெஸ்லி குணவர்த்தன “திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக சிறுபான்மையினர் ஆழமாக எண்ணுவார்களெனின் அது எதிர்ப்பையும் போராட்டத்தையும் விளைவிக்கும். நான், இனக் கலவரம் எனும் ஆபத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதைவிடப் பாராதூரமான ஆபத்தாக இந்நாடு பிரிவினையை எதிர்கொள்ள வேண்டி வரலாம். இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களே பெரும்பான்மையினர், அம்மக்கள் தமக்கு மாற்றமுடியாத அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்தால், அவர்கள் இந்நாட்டிலிருந்து பிரிந்து செல்லும் முடிவை எடுக்கும் சாத்தியம் இருக்கிறது” என்று, 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.

எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே ! | Independence Day Srilanka Article Tamil

அத்துடன் ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தை அதிரப் பண்ணினார். “சமத்துவம்தான் எமது நாட்டின் சுதந்திரத்துக்கான பாதை, அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தும். எங்களுக்கு ஓர் அரசு வேண்டுமா, இல்லை இரண்டா? எமக்கு ஓர்  இலங்கை வேண்டுமா, இல்லை இரண்டா? மொழிப் பிரச்சினை என்ற வெளித் தோற்றத்துக்குள் நாம் இந்தக் கேள்விகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் தமிழர்களை பிழையாக நடத்தினால், நீங்கள் தமிழர்களை துன்புறச்செய்தால், நீங்கள் தமிழர்களை அடக்கி ஆண்டால், நீங்கள் அடக்கியாளும் இனத்தவர்கள் வேறானதொரு தேசமாக உருவாகி இப்போதுள்ளதை விட அதிகமாக அவர்கள் கேட்கும் நிலை உருவாகும்” என்று தனிச்சிங்கள சட்டம் பற்றி அவர் எச்சரித்தார்.   

சுதந்திர தினத்தில் தமிழர்கொடி 

சிறிலங்காவின் முதல் சுதந்திர தினத்தில் ஈழத் தமிழர்களின் கொடி வைக்கப்பட்டது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். அப்போது சிங்க இலட்சினை கொண்ட பதாகை வைக்கப்பட்டது என்றும் அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நந்திக்கொடி முதல் சிலோன் சுதந்திர தினத்தில் வைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண அரசின் கொடியாக நந்திக்கொடி முக்கியம் பெறுகின்றது.

எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே ! | Independence Day Srilanka Article Tamil

அத்துடன் பிந்தைய காலத்தில்  சிறிலங்கா அரசழனட கடுமையான ஒடுக்குமுறைகளை கண்ட ஈழத் தமிழ் தலைவர்கள் சிறிலங்கா சுதந்திர தினத்தை புறக்கணித்ததுடன் தமிழர் தேசக் கொடியாக நந்திக்கொடியை அன்றைய நாளில் ஏற்றியுமிருந்தனர். கடந்த ஆண்டு கம்பஹாவில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

தாம் வடக்கு கிழக்கு வருகின்ற போது, இன்னொரு நாட்டிற்கு வருவதாகவே உணர்வதாக சிங்கள எழுத்தாளர்கள் சிலர் கூறினார்கள். நாமும் அப்படித்தான் தென்னிலங்கை வருகின்ற போது உணர்கின்றோம் என்றேன். போரை நடாத்தி இரண்டு நாடுகளை ஒன்றாக்கியதாக அன்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறினார். ஆனால் இன்னமும் உணர்வால், பிரச்சினைகளால், அணுகுமுறைகளால், பாரபட்சங்களால் இந்த தீவு இரண்டாகவே இருக்கின்றது. வடக்கு கிழக்கு தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்படுகையில், நீதி மறுக்கப்படுகையில் இந் நாள் கரிநாளாகவே அனுஷ்டிக்கப்படும்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila