தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம்

 தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தனது 82வது வயதில் நேற்றிரவு (29) இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

1942ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி யாழ் மாவிட்டபுரத்தில் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தன் ஊர் (மாவிட்டபுரம்) மீது கொண்ட பற்றினால் தனது பெயரை மாவை சேனாதிராஜா என மாற்றிக் கொண்டார்.

தனது பாடசாலைக் கல்வியை வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கற்ற பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சத்தியாக்கிரகப் போராட்டம்

தமிழ் தேசிய அரசியலுக்காக உழைத்த இவரின் அரசியல் பிரவேசம் குறித்து நோக்குகையில், மாவை சேனாதிராஜா 1961ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில் தந்தை செல்வாவுடன் தமிழ் மக்களுக்காக முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றார்.

தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம் | Itak Leader Mavai Senathirajah Passed Away

அதனைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தமையால் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, வெலிக்கடை, மெகசீன் சிறைச்சாலைகளில் சுமார் 7 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தனது வாழ் நாட்களை சிறையில் கழித்தார்.

தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம் | Itak Leader Mavai Senathirajah Passed Away

இதற்கிடையில் 1977 இல் மாவை சேனாதிராஜா தனது உறவுமுறையில் இருந்த 'பவானி' என்பவரை திருமணம் செய்தார்.

நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த மாவை

மாவை சேனாதிராஜாவின் நாடாளுமன்ற பிரவேசத்திற்கான முயற்சி 1989 இல் ஆரம்பமானது. இவர் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணி வேட்பாளர்களில் 13வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.

எனினும், 1989ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி அ. அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் இடத்திற்கு மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம் | Itak Leader Mavai Senathirajah Passed Away

இதோபோன்று 1999 ஆம் ஆண்டு ஜூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

பின்னர் 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) சார்பில் யாழ். மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை நிறுவின.

இதன் பின் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதேபோன்று 2004, 2010, 2015 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

எனினும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் இல் மாவை சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தசாப்தம் கடந்த தமிழரசுக் கட்சியின் தலைவர்... சரிந்தது மாவை எனும் விருட்சம் | Itak Leader Mavai Senathirajah Passed Away

மிக நெருக்கடியான காலகட்டங்களில் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பணியாற்றி கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

மாவை சேனாதிராஜா நீண்ட காலம் உடல் நலக்குறைவாக காணப்பட்ட நிலையில் குளியலறையில் தவறி விழுந்ததால் தலையில் உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

சுமார் 63 வருடங்கள் தமிழர்களுக்காக உழைத்த இவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாகும்.


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila