வலி. வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது என காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 


வடக்கு மாகாண ஆளுநருக்கும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL) இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் காணி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில், 

'யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கில் முன்னைய ஜனாதிபதியின் காலத்தில் 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காணியை விவசாயக் காணி என்று தவறாக அடையாளப்படுத்துகின்றனர். அது மக்களின் குடியிருப்புக் காணி. அந்தப் பகுதியிலுள்ள இராணுவ முகாமும் இன்னமும் அகற்றப்படவில்லை. மக்கள் குடியிருக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் வலி. வடக்கில் இன்னமும் மீள்குடியமர வேண்டியவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது.

எமது காணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போதும் எமது காணிகளுக்குள் பாதுகாப்புத் தரப்பினர் புதிய கட்டடங்களை அமைக்கின்றனர்.

பலாலி வீதியில், இன்னமும் மூன்று கிலோ மீற்றர்கள் விடுவிக்கப்பட்டாலே மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். விமான நிலையத்துக்கு மேலதிகமாக காணிகள் சுவீகரிக்கப்படத் தேவையில்லை. ஏற்கனவே சுவீகரித்த காணிகளே போதுமானது.

கிளிநொச்சியில் இரணைதீவில் கடற்படையினர் இப்போதும் பாஸ் நடைமுறையைப் பேணுகின்றனர் என்றும் பாதுகாப்புத் தரப்பினரால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன  

அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன . 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டும். கேப்பாபிலவு மாதிரிக் கிராமத்தில் சமூக சீர்கேடுகள் அதிகரித்துள்ள அதனால் காணி விடுவிப்பினை விரைவு படுத்த வேண்டும். 

வவுனியா மாவட்டத்தில் அரச காணிகள் பகிர்ந்தளிப்பில் சிக்கல்கள் நிலவுகின்றன. அவை தொடர்பில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்.

அதேவேளை யாழ். மாவட்டத்தில் காணியற்ற 114 குடும்பங்கள் மருதங்கேணியில் குடியமர்வதற்கு இணக்கம் வெளியிட்டபோதும்,  அவர்களுக்கு காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படவில்லை என இச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila