விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த அப்புக்குட்டி சிவகுமார், இறுதிப்போரின்போது புதுமாத்தளன் பகுதியில் படையினரிடம் சரணடைந்தார். இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்தபோது, 1997 - 1998 இற்கு இடைப்பட்ட காலத்தில் கிளிநொச்சி இராணுவ முகாம் மற்றும் இராணுவத்திற்கு எதிராக தாம் தாக்குதல் நடத்தினார் என்று குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றைத் தமது கைப்பட எழுதி, பொலிஸ் அத்தியட்சரிடம் வழங்கியிருந்தார். இதன்படி 16.11.2012 இல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அப்புகுட்டி சிவகுமார் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது எதிரி குற்றத்தை மறுதலித்தாரெனினும், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணையை மன்று நடத்தியதுடன், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் எதிரியால் தானாக, சுயமாக அச்சுறுத்தலின்றி எழுதிக் கொடுத்ததென ஏற்று வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சியமாக ஏற்கவும் தீர்ப்பளித்தது. இருப்பினும் ஐந்தரை வருட காலம் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்புகுட்டி சிவகுமார் மீதான இறுதி வழக்கு விசாரணை வவுனியா மேல்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் அப்புகுட்டி சிவகுமாரை வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். வழக்கில் எதிரி மீது தெளிவில்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் எப்போது, எந்த நேரத்தில் இடம்பெற்றமை மற்றும் தடயங்கள் தொடர்பான அறிக்கைகளில்லையெனவும் தீர்ப்பின் போது நீதிபதி தெரிவித்தார். மேலும் குற்ற ஒப்புதலை சாட்சியமாக ஏற்றாலும் கூட, இன்னுமொரு சாட்சியத்துடன் சுயாதீன மேலதிக சாட்சியங்களை, தடயங்களைக் கொண்டு வந்து ஒப்புறுதிப்படுத்தியிருக்க வேண்டுமெனவும் இதில் வழக்கு தொடுநர் தரப்பு தவறியிருப்பதாகவும் தெரிவித்த நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம், சாட்சியம் எந்தளவு நம்பகத் தன்மையுடையதாகவும், மன்றால் திருப்தியாக ஏற்பதற்கு சாதகமான நிலையை மன்று எடுக்க முடிவில்லை என்றும் தெரிவித்தது. நியாயமான சந்தேகத்திற்குப்பால் குற்றம் நிருப்பிக்கப்படாததால் எதிரியை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்தார். தற்சமயம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதியாகக் கடமையாற்றி வரும் சந்திரமணி விஸ்வலிங்கம், வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கெனப் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது வவுனியா மேல் நீதிமன்றம்!
Add Comments