பிரபாகரன் அன்று சொன்னது இன்று நடக்கிறது


news
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச நிச்சயமாக தோல்வி அடைவார் என ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜனசூரிய தெரிவித்தார்.
 
இன்றைய தினம் யாழில் ஐக்கிய சோசலிச கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மகிந்தவின் ஆட்சிக் காலம் முடிய இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்தப்படுகிறது.
 
இவ்வாறு தேர்தல் நடத்துவதை எவரும் விரும்பவில்லை. ஆனால் சோதிடர்களின் கணிப்புக்களை நம்பி மகிந்த ராஜபக்ச தேர்தலை நடத்துகிறார். 
 
மகிந்த ஒரு சோதிடத்தை நம்பும் மனிதர். அதனால் தான் சோதிடர்கள் கூறியதைப் போல 8ம் திகதி தேர்தலை நடத்துகின்றார்.
 
 
அவ்வாறு நடத்தினால் தான் வெற்றி பெறுவதாக நினைக்கின்றார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள திகதி கொழும்பிலுள்ள ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நாள்.
 
எனவே அன்றிலிருந்து மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. வடக்கு,கிழக்கு, மலையக பகுதிகளிலுள்ளவர்கள் மகிந்தவின் ஆட்சியினை ஒழிக்க ஆசைப்பகின்றார்கள். அதேபோல் தென்பகுதி சிங்கள மக்களும் மகிந்தவை விரும்பவில்லை.
 
இதனால் எதிர்வரும் 8ம் திகதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வி அடைவார். ஆனால் அவரை தொடர்ந்து ஆட்சிக்கு வருபவர் மைத்திரிபால சிறிசேன உண்மையில் அவரும் மகிந்த ராஜபக்சவின் இன்னொரு உருவமே.
 
தேர்தலில் மகிந்த ராஜபக்சவுடன் பொதுபலசேனாவும், மைத்திரிபாலவுடன் ஜாதிகஹெல உறுமயவும் கூட்டுச் சேர்ந்துள்ளமை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
 
மகிந்த இதுவரை காலமும் ஆட்சி செய்து தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கவில்லை என்றால் மீண்டும் ஆட்சிக்கு வந்து தீர்ப்பதாக கூறுகிறார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
அதேபோல் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீரப் போவதில்லை. நீண்ட காலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
 
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இது தமிழ் மக்களுக்கான தேர்தல் அல்ல சிங்கள மக்களுக்கானது  என்று கூறி தேர்தலை புறக்கணித்தார்.
 
நடைபெறவுள்ள தேர்தலும் அதேபோல தான்.  தமிழ் மக்களுடைய தேர்தலோ மலையக மக்களுடைய தேர்தலோ அல்ல, இது முற்று முழுதாக பெளத்த சிங்கள மக்களுடைய தேர்தல் போட்டியாகும்.
 
இந்தப் போட்டியில் வடக்கு,கிழக்கு மலையக பகுதிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன. ஏன் என்றால் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளை அதிகமாக பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இதனை தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களுக்கு பின்னர் இந்த தேர்தல் இடம்பெறுகிறது. இந்தத் தேர்தலில் 50 வீதத்திற்கு மேல் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது கட்சியின் உதவி நாடப்படும்.
 
இந்த முறை நடக்கப் போகும் தேர்தல் நிச்சயமாக எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. எனவே மூன்றாவது சக்தியாக நாங்கள் உருவெடுக்க வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் உதவி செய்ய வேண்டும்.
 
தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி பிரிந்து செல்ல வேண்டும் என்று கோரினால் அதற்கும் இடமளிக்க வேண்டும் என்பதே எமது கட்சியின் கொள்கை.
 
எனவே நடைபெறப் போகும் தேர்தலில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila