புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்திற்காக வெல்லம்பிட்டியில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றின்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னியக்க துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
வாகனங்களில் வந்த குழுவொன்றில் இருந்த ஒருவர் தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
சம்பவ இடத்தில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின்போது வெற்றுத் தோட்டாக்கள் பல கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் மேடையின் கூரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளுக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.