குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
யாழ்ப்பாணப் பல்கைலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெறும்வகையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சகல பீடங்களுக்கும் அலகுககளுக்கும் துணைவேந்தர் இவ்வாறு கோரிக்கை விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மற்றும் விரிவுரையாளர்களின் கையொப்பங்களை கோரி பீடாதிபதிகளுக்கு கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.
குறித்த வாழ்த்துக் கடிதம் பத்திரிகைகளுக்கு பிரசுரத்திற்காக அனுப்பும் உரிமை கொண்டது என்றும் அதற்கும் சம்மத ஒப்பம் இடுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதரவு ஒப்பத்தை திரட்டுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே துணைவேந்தரை பணித்தாக கூறப்படுகிறது.
துணைவேந்தரின் இந்த நடவடிக்கைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்று ஆசிரியர் சங்கம் சுட்டடிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களின் அழிவுக்கு தாமே காரணமானவர்கள் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் இராசகுமாரன் இனத்தை காட்டிக் கொடுத்து உயர்கல்வியை நாசமாக்கும் இந்த செயலை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறான ஈனச் செயல்களின் பாற்பட்ட கடிதத்தில் ஒப்பமிடமாட்டோம் என்று தெரிவித்த இராசகுமாரன் எமது சிந்தனையும் செயலும் எமது மக்களினதும் எமது தேசத்தினதும் விடிவையும் விடுதலையையும் நோக்கியது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்