இலங்கையின் முந்தைய ஆட்சிக்காலத்தில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கண்டனத் தீர்மானம் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா, இன்று புதன்கிழமை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அவர் தனது அலுவலகத்துக்கும் சென்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ததற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவரது பதவி நீக்கம் செல்லுபடியாகாது என்றும், அதேவேளை மொஹான்பீரிஸ் அவர்கள் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்றும் மூத்த சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறினார்.
அதனால்தான் ஷிராணி தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே தற்போது பதவிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸை கண்டிக்கும் ஆர்பட்டமொன்று இன்று காலை உச்சநீதிமன்ற வளாகம் முன் நடைபெற்றது.