
மேலும் மூன்று மாவட்டங்களுக்கான வாய்மூல சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் 25 முதல் 30ம் திகதி வரை குறித்த விசாரணைகள் இடம்பெறுவுள்ளன.
இந்த மூன்று மாவட்டங்களினதும் வாய்மூல விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் 5 மாவட்டங்களுக்கான வாய்மூல சாட்சி விசாரணை நடவடிக்கைகள் இறுதியடைவதாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாஸ தெரிவித்தார்.
இந்த மாவட்டங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலும் சாட்சி விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என்பதனால் குறித்த தினங்களில் வருகை தந்து சாட்சியமளிக்குமாறு அவர் கூறினார்.
இதுதவிர யாழ்ப்பாணத்தில் சாட்சி விசாரணை நடவடிக்கைகள் அண்மையில் நிறைவு பெற்றது. இதேவேளை இறுதி மாவட்டங்களான கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் அப்பாறை மாவட்டங்களுக்கான சாட்சி விசாரணைகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெறவுள்ளது.