இலங்கைக்கு திரும்பி வரவுள்ள ராணுவ அதிகாரிகள் யார் ? இதோ பட்டியல் !


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்தபின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷேவால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 12 ராணுவத் தளபதிகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரும் முடிவை எடுத்துள்ளது புதிய இலங்கை அரசு. இதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளார், இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபின், யுத்தத்தில் ஈடுபட்ட ராணுவத் தளபதிகளில் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக பதவிகளை கொடுத்திருந்தார், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே.
இறுதி யுத்தத்தின்போது நடந்த பல விஷயங்களை நன்கு அறிந்ததாக கூறப்படும் இலங்கை ராணுவத்தை சேர்ந்த 12 பேர் தற்போதும் வெளிநாடுகளில்தான் உள்ளனர். இவர்களில் சிலர்மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. ஆனால், வெளிநாடுகளில் இவர்களை கைது செய்ய முடியாது. காரணம், இலங்கையின் ராஜதந்திரிகளாக இவர்கள் பதவியில் இருந்தனர். இவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு, ராஜதந்திரிகளுக்கான சர்வதேச பாதுகாப்பு (diplomatic immunity) இவர்களுக்கு கவசமாக இருந்தது. கோத்தாபய ராஜபக்ஷேவின் நம்பிக்கைக்குரிய இப்படியான 12 ராணுவத் தளபதிகளை வெளிநாட்டு தூதரக பதவிகளில் இருந்து திருப்பி அழைத்துக் கொள்வது என்ற முடிவை, புதிய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இதோ, அவர்களது பெயர்களும், வெளிநாடுகளில் இலங்கை தூதரக பதவிகளும்-
1) முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட - இலங்கை தூதர், ஜப்பான்.
2) முன்னாள் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி - இலங்கை தூதர், பாகிஸ்தான்.
3) முன்னாள் விமானப்படை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் டொனால்ட் பெரேரா - இலங்கை தூதர், இஸ்ரேல்.
4) முன்னாள் ராணுவ தளபதி சாந்த கொட்டகொட - இலங்கை தூதர், தாய்லாந்து.
5) முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் திஸார சமரசிங்கே - இலங்கை தூதர், ஆஸ்திரேலியா.
6) மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே, - இலங்கை துணைத் தூதர், தென்னாபிரிக்கா.
7) மேஜர் ஜெனரல் லலித் டவுலுகல, - இலங்கை துணைத் தூதர், மலேசியா.
8) மேஜர் ஜெனரல் கிருஷாந்த சில்வா, - இலங்கை துணைத் தூதர், ரஷ்யா.
9) மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, - இலங்கை தூதர், ரஷ்யா.
10) லெப்டினென்ட் கமாண்டர் ஜே.கே. பண்டார - இலங்கை துதரக 2-ம் செயலாளர், ஜப்பான்.
11) பிரிகேடியர் தேசப்பிரிய திஸ்ஸநாயகே, இலங்கை துதரக 2-ம் செயலாளர், துருக்கி.
12) மேஜர் ஜெனரல் சவிந்திர டி சில்வா, இலங்கை துணைத் தூதர், ஐ.நா.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila