இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரத்துசெய்து அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருக்கிறது.
இலங்கைப் போரின் இறுதிக்காலத்தில் இலங்கை ராணுவத்துக்கு தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போர் முடிந்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முரண்பட்டு, 2010ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வேட்பாளராக மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிட்டார்.ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வந்த பின்னர், பொன்சேகா கைது செய்யப்பட்டு, அவர் மீது ராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தி, அவரது ராணுவ அந்தஸ்து பறிக்கப்பட்டது.
இப்போது நடந்து முடிந்த தேர்தலில் சரத் பொன்சேகா எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இதனடையே, மற்றொரு திருப்பமாக, இலங்கை உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி, மொஹான் பீரிஸ் தனது பதவியிலிருந்து விலக ஒப்புக்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன கூறியிருக்கிறார்.
மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சமீபத்தில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.