ஈழத்தமிழர் தாயகமெங்கும் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது சிங்களப் படை. 2009 மே 19இல் விடுதலைப் புலிகள் ஒருதலைப் படசமாகத் தம் ஆயுதங்களை மௌனித்தபின்னர் இன்று வரை தமிழர் தரப்பிலிருந்து அரசியல் வன்முறை நிகழ்வு ஒன்று கூட நடைபெறவில்லை என்பது உலகறிந்த உண்மை. இந்த நல்ல அமைதிச் சூழ்நிலையைக் கெடுக்கும் பின்வரும் ஆணையைக் கொழும்பு அரசு பிறப்பித்துள்ளமை கண்டிக்கத்தக்கது. 02.02.2015இல் இலங்கை அரசு வெளியிட்ட அரசிதழில் (வர்த்தமானி) ஈழத்தமிழர் தாயகத்தில் நிலைகொண்ட ஒவ்வொரு படைவீரனும் தன்னுடைய படைசார் பணிக்கு அப்பால், குடிசார் பணியில் அதுவும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் எனக் குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டுள்ளார். ஈழத் தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களப் படை வெளியேறவேண்டும் அதுவரை அப்படை முகாம்களுள் முடங்கவேண்டும் என்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளைப் புறந்தள்ளியது மட்டுமல்லாமல், கொடுங்கோலாட்சி நோக்குடன் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் ஆணையை, குடிசார் பணிகளைப் படைகளும் மேற்கொள்ள, காவல்துறையின் கடமைகளைப் படைவீரரும் செய்யலாம் என்ற குடியரசுத் தலைவரின் 02.02.2015 நாளிட்ட ஆணை, புதிய ஆட்சியில் தமிழருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது. தமிழர் வாக்குகளை மைத்திரிபால சிரிசேன பெற்றதால் மகிந்த இராசபட்ச தோற்றார். தமிழர் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றவர் தமிழர் முதுகில் குற்றியுள்ளார். தமிழரை ஏமாற்றியுள்ளார். காலாதிகாலமாக, தமிழர் ஒத்துழைப்புடன் ஆட்சிக்கு வருவதும் பின் தமிழர் முதுகில் குற்றுவதும் சிங்கள ஆட்சியாளர் வழமை. ஐக்கிய தேசியக் கட்சியாயெனில், இடது சாரிகள் கூட்டணியாயயெனின், அல்லது இன்றைய ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த சுதந்திரக் கட்சி ஆட்சியாயினென் 1948க்குப்பின் இவ்வாறே தமிழர்களை ஏமாற்றி வந்துள்ளனர். 1919இல் சிங்களவருடன் இணங்கி ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் வாழலாம் எனக் கருதிய இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலம் அருணாசலம் (மைத்திரிபால சிரிசேன ஆட்சியில் அருணாசலத்தின் பூட்டன் சுவாமிநாதன் அமைச்சர்) தொடக்கம் 2015 தேர்தலில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற முழக்கத்துடன் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளித்த இரா. சம்பந்தன் வரை தொடர்ச்சியாகச் சிங்கள ஆட்சியாளரால் ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். இந்த ஏமாற்றங்களே தமிழரைப் போராட்ட விளிம்புக்குத் தள்ளின. மீண்டும் போரட்டத்தைத் தமிழர் நாடுமுன் இந்தியா தலையிடவேண்டும். 1987 இலங்கை இந்திய உடன்பாட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தும் தார்மீகக் கடமை இந்தியாவுக்கு உண்டு. அதுவே தமிழருக்கு ஆறுதலளிக்கும் முதற்படி. வடக்குக் கிழக்கும் இணைந்த தமிழர் மரபுவழித் தாயகம், அதிகாரப் பகிர்வுக்கான அரசியமைப்பின் 13ஆவது திருத்தம், 2009இல் இந்தியாவுக்கும் ஐநாவுக்கும் இராசபட்ச வழங்கிய 13ஆவது திருத்தத்துக்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு, இவற்றை நடைமுறைப் படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவது இந்திய அரசின் இன்றைய கடன். |
2015 பெப்புரவரியில் தமிழரை மீண்டும் ஏமாற்றிய சிங்கள அரசு! - மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Add Comments